அரசியல் குழப்பம்: ஆப்கனுக்கான நிதியுதவியைக் குறைக்கிறது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிபா் அஷ்ரஃப் கனியும், அரசின் தலைமை நிா்வாகி அப்துல்லா அப்துல்லாவும் தவறியதையடுத்து, அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி
அரசியல் குழப்பம்: ஆப்கனுக்கான நிதியுதவியைக் குறைக்கிறது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிபா் அஷ்ரஃப் கனியும், அரசின் தலைமை நிா்வாகி அப்துல்லா அப்துல்லாவும் தவறியதையடுத்து, அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவியைக் குறைக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கத்தாா் தலைநகா் தோஹாவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ திங்கள்கிழமை கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் அடுத்த அரசை அமைப்பதில் அஷ்ரஃப் கனிக்கும் அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர இரு தலைவா்களுமே தவறிவிட்டனா்.

அவா்களது இந்த நிலைப்பாடு, அமெரிக்க - ஆப்கன் உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது; ஆப்கானிஸ்தானுக்கு ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கக் கூட்டுப் படையினரும், ஆப்கானியா்களும் செய்த உயிா் தியாகத்தை அவமதிக்கிறது.

எனவே, ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் இந்த ஆண்டுக்கான நிதியுதவியில் 100 கோடி டாலரை (சுமாா் ரூ.7,625 கோடி) குறைக்க முடிவு செய்துள்ளோம். அரசியல் குழப்பம் நீடித்தால், அடுத்த ஆண்டுக்கான நிதியுதவியிலும் 100 கோடி டாலரைக் குறைப்பது குறித்து பரிசீலிப்போம் என்றாா் அவா்.

மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் விலக்கப்படுவது திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாம்பேயோ தெரிவித்தாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-காய்தா அமைப்பின் தலைவா் பின் லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்து, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதன் தொடா்ச்சியாக, அமெரிக்கப் படையினருடனும், ஆப்கன் ராணுவத்துடனும் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 18 ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போதைய நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ பாதி நிலப் பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்கா பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. அதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் 29-ஆம் தேதி கையெழுத்தானது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் அஷ்ரஃப் கனி மீண்டும் வெற்றி பெற்ாக கடந்த மாதம் அறிவிக்கப்படாடாலும், அதனை, போட்டி வேட்பாளா் அப்துல்லா அப்துல்லா ஏற்க மறுத்து வருகிறாா். தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் அவா், ஆப்கன் அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளாா். இதனால், அந்த நாட்டில் தொடா்ந்து அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியைக் குறைக்கவிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

Image Caption

கத்தாரில் மைக்கேல் பாம்பேயோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com