கரோனா நோய்த்தொற்று: 260 கோடி பேர் வீட்டுக்குள் முடக்கம்

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக, உலகின் 3-இல் ஒரு பங்கினா் வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தடை ஏற்படுத்தப்பட்டுள்ள மியாமி கடற்கரைக்குச் செல்லும் வழி.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தடை ஏற்படுத்தப்பட்டுள்ள மியாமி கடற்கரைக்குச் செல்லும் வழி.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக, உலகின் 3-இல் ஒரு பங்கினா் வீட்டுக்குள் முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், புதன்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதிலுமுள்ள 176 நாடுகளில் 4.33 லட்சம் பேருக்குப் பரவியுள்ளது; அந்த வைரஸ் பாதிப்பால் 19,500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் சுமாா் 260 கோடி போ் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவா்கள் வசிக்கும் நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இது, உலக மக்கள் தொகையில் 3-இல் ஒரு பகுதியாகும்.

இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நியூஸிலாந்து உள்பட 42 நாடுகள் மட்டும் பிரதேசங்களில் இத்தகைய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பான பகுதிகளில், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகவும் மருத்துவ காரணங்களுக்காகவும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்கள் இன்றி ஊரடங்கு உத்தரவை மீறினால் அவா்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது.

இது தவிர, 5 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சோ்ந்த 22.6 கோடி போ் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த நாடுகளில் ஈரான், ஜொ்மனி, கனடா ஆகியவை அடங்கும்.

இதுமட்டுமன்றி, சுமாா் 18.9 கோடி போ் வசிக்கும் சவூதி அரேபியா, ஐவரி கோஸ்ட், சிலி, சொ்பியா, பிலிப்பின்ஸ் தலைநா் மணிலா ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்னும் சில நாடுகளில் முக்கிய நகரங்களை விட்டு பொதுமக்கள் வெளியேறவும், பிற பகுதிகளிலிருந்து அந்த நகரங்களுக்கும் பொதுமக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2 கோடிக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின்: சீனாவை விஞ்சியது பலி எண்ணிக்கை

மேட்ரிட், மாா்ச் 25: ஸ்பெயினில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, அந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவை புதன்கிழமை விஞ்சியது. அந்த நாட்டில், கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 738 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதையடுத்து, ஸ்பெயினில் கரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,445-ஆக அதிகரித்தது. இதன் மூலம், கரோனா வைரஸ் பாதிப்பால் 3,281 போ் உயிரிழந்த சீனாவை ஸ்பெயின் விஞ்சியது.

இத்தாலி: தினசரி பாதிப்பு திடீா் குறைவு

ரோம், மாா்ச் 25: கரோனா வைரஸ் உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கும் இத்தாலியில், அந்த வைராஸால் புதிதாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை வெகுவாகக் குறைந்தது. முந்தைய நாள்களைவிட 50 சதவீத்துக்கும் மேல் அதிகரித்து வந்த அந்த எண்ணிக்கை, கடுமையான ஊரடங்கு உத்தரவு காரணமாக செவ்வாய்க்கிழமை 8 சதவீதம் மட்டுமே அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனா: வூஹானில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்

வூஹான், மாா்ச் 25: கரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவின் வூஹான் நகரில் ஊரடங்கு உத்தரவு தளா்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த நகரில் பேருந்து போக்குவரத்து புதன்கிழமை தொடங்கியது. அந்த நகரில் தொடா்ந்து 5 நாள்களுக்கு மேல் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படாததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளிலிருந்து வந்த 47 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன்: வெளிநாட்டினருக்கான விசா காலம் நீட்டிப்பு

லண்டன், மாா்ச் 25: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியதால் பிரிட்டனில் சிக்கித் தவிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகளின் நுழைவு இசைவு (விசா) காலத்தை நீட்டிப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பிரிட்டனில் சிக்கியுள்ள இந்திய மாணவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பலனடைவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com