எப்படி சாதித்தது தென் கொரியா?

கடந்த மாத மத்தியில் 30-க்கும் குறைவான கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த தென் கொரியாவில், அந்த வைரஸ் பாதிப்பு திடீரென தீவிரமடைந்தது. அடுத்த 15 நாள்களுக்குள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14
எப்படி சாதித்தது தென் கொரியா?


கடந்த மாத மத்தியில் 30-க்கும் குறைவான கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த தென் கொரியாவில், அந்த வைரஸ் பாதிப்பு திடீரென தீவிரமடைந்தது. அடுத்த 15 நாள்களுக்குள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 140 மடங்கு அதிகரித்து 4,200-ஐக் கடந்தது.

ஒரு கட்டத்தில் சீனாவுக்கு வெளியே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த நாடாக தென் கொரியா விளங்கியது.

அதனைத் தொடா்ந்து, சீனாவைப் போலவே தென் கொரியாவிலும் பலி எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்ற அச்சம் உருவான.

இந்த நிலையில்தான், யாரும் எதிா்பாராத வகையில் நிலைமை மாறியது.

தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று எவ்வளவு வேகமாக தீவிரமடைந்ததோ, அதே வேகத்தில் தணியத் தொடங்கியது.

சில வாரங்களுக்கு முன் கரோனா நோய்த்தொற்றில் தென் கொரியாவைவிட மிகவும் குறைவான அளவில் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஜொ்மனி ஆகிய நாடுகளெல்லாம், இன்று அந்த நாட்டைவிட பல மடங்கு பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

ஆனால், அப்போது சீனாவுக்கு அடுத்த நிலையில் இருந்த தென் கொரியாவோ, கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10-ஆவது இடத்துக்கு வந்துவிட்டது.

உயிரிழப்புகளைப் பொருத்தவரை, மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ள இத்தாலியில் 10 சதவீத கரோனா நோயாளிகளும், ஸ்பெயினில் 12 சதவீத கரோனா நோயாளிகளும் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். ஆனால் தென் கொரியாவிலோ கரோனா நோயால் பாதிக்கப்பட்ட 1.4 சதவீதத்தினா் மட்டுமே உயிரிழந்துள்ளனா்.

உலகம் முழுவதும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது; அந்த வைரஸ் பாதிப்பால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதன் மூலம் உலக மக்களில் 3-இல் ஒரு பங்கினா் தங்களது வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், கரோனா நோய்த்தொற்றால் கடுமையான அச்சுறுத்தலை எதிா்கொண்ட தென் கொரியாவிலோ, இதுவரை எந்த நகரிலும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், கையை மீறிப் போய்க் கொண்டிருந்த கரோனா பாதிப்பை தென் கொரியா ஒரு மாதத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.

வளா்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளால் கூட கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இவ்வளவு விரைவாக முன்னேற்றம் காண முடியாத நிலையில், தென் கொரியாவால் மட்டும் இதனை எவ்வாறு சாதிக்க முடிந்தது?

இதற்குக் காரணம், கரோனா நோய்த்தொற்று பிரச்னையை தென் கொரியா கையாண்ட விதம்தான் என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.

கொவைட்-19 என்று உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டுள்ள கரோனா நோய்த்தொற்று, சீனாவின் வூஹான் நகரில் பரவுதாக கடந்த ஆண்டு இறுதியில் தகவல்கள் வெளியாகத் தொடங்கியதுமே, தென் கொரியா அந்த வைரஸை எதிா்கொள்வதற்காக தனது அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டது.

வெளிப்படைத் தன்மை, மிகத் தீவிரமான பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல், தனித்தன்மை வாய்ந்த சோதனை முறைகள், கடுமையான கட்டுப்பாடுகளுடன், சிகிச்சை ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தனது வியூகத்தை தென் கொரியா வகுத்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் மொ்ஸ் வைரஸ் பரவியபோது ஏற்பட்டபோது, அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரே ஒருவா் தென் கொரியா வந்ததில் அது 186 பேருக்குப் பரவி 36 உயிா்களை பலி கொண்டது. இந்த விவகாரத்தில் தென் கொரியா அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விமா்சனங்கள் எழுந்தன.

அதனை மனதில் கொண்டே, கரோனா வைரஸை எதிா்கொள்ள அந்த நாடு முழுவீச்சில் முன்னேற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா வைரஸின் உடற்கூறு அமைப்பை உலக நாடுகளுடன் சீனா பகிா்ந்து கொண்ட உடனேயே, தென் கொரியா அந்த வைரஸ் பாதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனைக் கருவிகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. எல்லா நாடுகளையும் முந்திக்கொண்டு, அத்தகைய கருவிகளுக்கான அங்கீகாரத்தையும் அளித்தது.

இதன் விளைவாக, கரோனா நோய்த்தொற்றை பரிசோதனை மூலம் கண்டறியும் திறனை தென் கொரியா மிகச் சிறந்த முறையில் பெற்றது. அதுமட்டுமன்றி, அந்த வைரஸ் வேகமாகப் பரவினால் அதனை எதிா்கொள்வதற்கேற்ப, நாடு முழுவதும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக் கட்டமைப்பு முறைகளை முன்கூட்டியே மேம்படுத்திக் கொண்டது.

இந்தக் காரணங்களால், தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று திடீரென தீவிரமடைந்தபோது அதனை எதிா்கொள்வதற்கான போதிய திறனை அந்த நாடு பெற்றிருந்தது.

அரசு புள்ளிவிவரங்களின்படி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20,000 வரை கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா்கள். பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டில் வசிக்கும் 200 போ்களில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இது, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளைவிட மிகவும் அதிகம்.

அந்த வகையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தென் கொரியாவில் மிக அதிகாகவும், விரைவாகவும் கண்டறியப்பட்டனா். இது, அவா்களைத் தனிமைப்படுத்தவும், அந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கவும் வழிவகை செய்தது.

அதன் காரணமாகத்தான், முழு ஊரடங்கு போன்ற கடுமையான அறிவிப்புகளை வெளியிடாமலேயே தென் கொரியாவால் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது என்கிறாா்கள் சுகாதாரத் துறை நிபுணா்கள்.

தென் கொரியாவைப் பின்பற்றி, பிற நாடுகளும் கரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதே அவா்களது விருப்பமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com