பெய்ஜிங்கின் சதுக்க நடன பாட்டியின் நேசம்

புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இந்தக் கேள்விதான் நான் என்னிடம் கேட்டுக் கொண்டது.
பெய்ஜிங்கின் சதுக்க நடன பாட்டியின் நேசம்

உனக்கு பயமாக இருக்கா, இல்லையா?

புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இந்தக் கேள்விதான் நான் என்னிடம் கேட்டுக் கொண்டது. உண்மையைச் சொல்லப்போனால் சிறிதும் பயம் இல்லை. ஏனெனில், எனது அலுவலகப் பணியாளர்கள் என்னை நன்கு பாதுகாத்துக் கொள்வர் என்று உறுதியாகத் தெரியும். அந்தச் சமயத்தில், ஒரு இந்திய நண்பர் என்னிடம் “நீ ஏன் இன்னும் சீனாவிலேயே தங்கி இருக்கிறாய், ஆபத்தானது,” என்று கூறினார். மேலும், “பணம் ஈட்டத்தான் அங்கேயே இருக்கிறாய், பேராசைக்காரன்,” என்று பகடியும் செய்தார். ஆனால், அவர் என்னைப் புரிந்திருக்கவில்லை, பிழையாக எண்ணிக் கொண்டார்.

இந்தப் பிரச்னையை நான் ஒரு அறைகூவலாகத்தான் பார்த்தேன். பொதுவாக, அறைகூவல்கள் வெவ்வேறு வடிவங்களில் வரும். அதனை எதிர்கொள்வதற்கும் பல்வேறு வழிமுறைகள் இருக்கும். ஒருவர் அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் அவரின் வெற்றி உள்ளது. 

பயத்தில் ஓடி ஒளிந்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தேன். இந்த அறைகூவலை எதிர்கொள்வோம் என்று உறுதியாக முடிவெடுத்து சீனாவிலேயே தங்க முடிவு செய்தேன். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

இந்த வைரஸ் பரவலை சீன அரசு விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்று தீர்க்கமாக நம்பினேன். சீன அரசும், மக்களும், “இது ஒரு கடுமையான போர், அதில் தோற்று விடக்கூடாது,” என்று கருதினர். இவ்வாறாக அனைவரும் ஒத்த மனதுடன் இருக்கையில் நான் மட்டும் எதற்குப் பயப்பட வேண்டும்?

மேலும், இக்கடினமான காலத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டனர், ஒருவருக்கு ஒருவர் உற்சாகமூட்டிக் கொண்டனர். எனது சக பணியாளர்களும் நண்பர்களும் அவ்வப்போது எனக்கு குறுந்தகவல் அனுப்பி எனது உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர், நம்பிக்கை ஊட்டினர். நிறைய பேர் அவ்வாறு செய்திருந்தாலும் ஒருவரை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்தான், 74 வயதான பாட்டி. 

சீனா வந்த 6 ஆண்டுகளில் கற்றுக்கொண்டது நிறைய. அதில், சதுக்க நடனமும் ஒன்று. அங்குதான் அந்தப் பாட்டி எனக்கு பழக்கமானார். அவரை நான் பாட்டி என்று அழைத்தால், “அவ்வாறு அழைக்காதே, லாவ்மா என்று கூப்பிடு,” என்று அவர் கூறுவார். சீன மொழியில் லாவ் மா என்றால் வயதான அம்மா என்று பொருள். 

வைரஸ் பரவல் காரணமாக மக்கள் ஒன்றுகூடக் கூடாது என்பது விதி. அதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சதுக்க நடனமும் சிறிது காலம் தடைப்பட்டது. அப்போதெல்லாம் அலுவலகப் பணியைத் தவிர, வீட்டிலேயே இருந்து நூல்கள் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தேன். இருப்பினும், மனது ஒரு வித அழுத்தம் தொற்றிக் கொண்டது. அத்தகயைதொரு சமயத்தில்தான் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது லாவ்மா-வின் அழைப்பு. இந்த இரு மாதங்களில் அவரைக் கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். ஆனால், அவர் என்னை மறவாமல் அழைத்து எனது உடல்நிலை குறித்து விசாரித்தார். “உடலை நன்றாகப் பாதுகாத்துக் கொள், நிறைய சாப்பிடு, வெளியில் சுற்றாதே, முகக் கவசம் கட்டாயம் அணிந்து கொள், நடனமாட வராதே,” என்று அன்புடன் அறிவுரை வழங்கினார். அவரின் பேரன்பு எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் எனது உடல் நலம் குறித்து விசாரிப்பார். ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூறும் அறிவுரையைப் போல அவர் கூறுவது இருக்கும். அவரின் உறவு என்னை உண்மையாலுமே நெகிழ வைத்துள்ளது.

தற்போது, கரோனா வைரஸ் பரவலை சீன அரசு முழுமையாகக் கட்டுப்படுத்தி விட்டது. நான் இப்போது சதுக்க நடனத்துக்குச் செல்ல ஆரம்பித்து விட்டேன். ஒருநாள் லாவ்மாவும் வந்திருந்தார். மேடையின் மீது நாங்கள் ஆடிக் கொண்டிருந்தபோது, மெதுவாக எனது அருகில் வந்து நின்ற அவர், எனது தோள்பட்டையைப் புன்னகையுடன் தட்டிக்கொடுத்து “எப்படி இருக்கிற?” என்று கேட்டார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவரைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி.

நாடு, அரசு மற்றும் மதம் இவைகளுக்கு வேண்டுமானால் எல்லைகள் இருக்கும். ஆனால், மனித நேயத்துக்கு எல்லைகள் கிடையாது. எல்லைகளைக் கடந்து மனித நேயம் பரவும் என்பதற்கு லாவ்மாவின் அன்பு ஒரு உதாரணம். அன்பே அனைத்தையும் வெல்லும். அன்பால் இந்த உலகை வெல்வோம்.

தமிழப் பிரிவுப் பணியாளர் பண்டரிநாதனின் அனுபவம்

தகவல் – சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com