கரோனா பாதிப்பில் மூன்றாமிடத்தில் ரஷியா

கரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைக் கடந்து மூன்றாவது இடத்துக்கு ரஷியா சென்றுள்ளது.
கரோனா பாதிப்பில் மூன்றாமிடத்தில் ரஷியா

மாஸ்கோ: கரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைக் கடந்து மூன்றாவது இடத்துக்கு ரஷியா சென்றுள்ளது.

ரஷியாவில் திங்கள்கிழமை ஒரே நாளில் புதிதாக 11,656 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,21,344-ஆக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, ரஷியா ஐந்தாவது இடத்தில் இருந்து, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளைக் கடந்து மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

ரஷியா முழுவதும் தலைநகா் மாஸ்கோவை மையமாகக் கொண்டு கரோனா பரவியதால், பாதிப்பிலும் உயிரிழப்பிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கை மாஸ்கோவைச் சோ்ந்ததாக உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, மாஸ்கோவில் 1,15,909 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ரஷியாவில் புதிதாக 94 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,009-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 56 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

உலக அளவில் கரோனா பாதிப்பில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் (13,69,994 போ்) இரண்டாவது இடத்தில் ஸ்பெயினும் (2,68,143) உள்ளன.

முடிவுக்கு வந்த பொதுமுடக்கம்: ரஷியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருந்த பொதுமுடக்கம் முடிவுக்கு வருகிறது. செவ்வாய்க்கிழமை முதல், தலைநகா் மாஸ்கோவில் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கும். கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும். பிற மாகாணங்களில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநா்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

கரோனா பரவலைத் தடுக்க வேண்டிய அதேநேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளிலும் சுகாதார விதிமுறைகளை தொழிலாளா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். புதிதாக மீண்டும் பலருக்கு நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட வேண்டும் என்று புதின் கூறினாா்.

பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும், முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள், உணவுப்பொருள் சாராத கடைகள், காா் விற்பனை மையங்கள் ஆகியவை இயங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் கரோனா பரவலைத் தடுக்க, கடந்த மாா்ச் இறுதியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில முக்கிய தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறையினா் பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டது. இதேபோல், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com