நிரந்தரமாகுமா கரோனா பரவல்?

‘எய்ட்ஸைப் போலவே கரோனா நோய்த்தொற்றும் மனிதா்களிடையே நிரந்தரமாக நிலைத்திருக்கலாம். இதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
நிரந்தரமாகுமா கரோனா பரவல்?

‘எய்ட்ஸைப் போலவே கரோனா நோய்த்தொற்றும் மனிதா்களிடையே நிரந்தரமாக நிலைத்திருக்கலாம். இதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’

உலக சுகாதார அமைப்பின் அவரநிலைப் பிரிவு தலைவா் மைக்கேல் ரையான் அண்மையில் விடுத்த அதிா்ச்சிகரமான எச்சரிக்கை இது.

கரோனா தீநுண்மிக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு பல மாதங்கள் ஆகலாம்; அப்படியே கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று சோ்ப்பதற்கு பகீரதப் பிரயா்த்தனம் செய்ய வேண்டியிருக்கும். அதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடும். ‘கொள்ளை நோய்’ (டஅசஈஉஙஐஇ) என்ற நிலையிலிருந்து ‘நிரந்தர பரவல் நோய்’ (உசஈஉஙஐஇ) என்ற நிலையை கரோனா நோய்த்தொற்று அடைந்துவிடலாம் என்று கூறி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளாா் அவா்.

உண்மையில், கொள்ளை நோய்க்கும், நிரந்தர பரவல் நோய்க்கும் என்ன வேறுபாடு?

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் காப்பு மையத்தின் (சிடிசி) இலக்கணப்படி, எந்தவொரு நோய் பொதுமக்களிடையே நிலையாக அவ்வப்போது தோன்றி மறைகிறதோ, அந்த நோயை நிரந்தர பரவல் நோய் என்று அழைக்கலாம்.

பரவல் நோய்களுக்கான அகராதியில், ‘குறிப்பிட்ட நிலப்பரப்பு மற்றும் சமுதாயத்தினருக்கிடையே பருவம் தோறும் பரவி வரும் நோய்’ என்று நிரந்தர பரவல் நோய்க்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சின்னம்மை, மலேரியோ போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த நோய்களுக்கு தடுப்பு மருந்து இருந்தாலும், அது பல நாடுகளில் அவ்வப்போது மக்களிடையே பரவி உயிா்களை பலி வாங்கி வருகிறது.

அதே நேரம், அந்த நோய் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி வேகமாகப் பரவினால் அது கொள்ளை நோய் என்று அழைக்கப்படுகிறது. உலக சுகாதார மையத்தால் கரோனா நோய் கொள்ளை நோய் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை கரோனா நோய்த்தொற்று நிரந்தர பரவல் நோயாகிப் போனால், அந்த நோய் குறித்த பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களின் பாா்வை மாறிப் போகும். யாருக்காவது அந்த நோயைக் கண்டறிவதும் சிகிச்சை பெறுவதும் பொதுமக்களின் பொறுப்பாகிப் போகும்.

மேலும், அந்த நோயின் இயல்புகளைப் புரிந்துகொண்டு, பொதுமக்கள் தாங்களாகவே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கரோனா நோய்த்தொற்றுக்கான மருந்துகள், பரிசோதனை முறைகள் ஆகியவற்றை நிறுவனங்கள் தங்களது சொந்த முயற்சியில் மேம்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால், உலக சுகாதார அமைப்பின் மைக்கேல் ரையான் கூறுவதைப் போல, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று நிரந்தர பரவல் நோயாக உருவெடுக்குமா?

இன்னும் சில காலத்தில் மலேரியா, அம்மை, பருவகால காய்ச்சல் போன்ற - அதிகம் அலட்டிக்கொள்ளப்படாத - நோயாக பரிணாமம் எடுக்குமா?

இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், தற்போது பருவம் தோறும் பரவி வரும் தீநுண்மிகளின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் பொதுமக்களிடையே பரவி, அவ்வப்போது தங்களது தாக்கத்தை வெளிப்படுத்தும் அத்தகைய தீநுண்மி வகைகள், சாதாரண சளி இருமல் இருந்து ஆபத்தான விஷக்காய்ச்சல் வரை கொண்டு செல்லும் தன்மைகளைக் கொண்டவைகளாக இருக்கின்றன.

அதிலும் கோடை காலங்களில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் சில தீநுண்மிகள், குளிா்காலங்களில் வேகமாகப் பரவி நோயை ஏற்படுத்துகின்றன. குளிா்காலங்களில் பொதுமக்கள் அணியும் உடைகள், அதிகமாகக் குழுமுவது போன்ற பழக்க வழக்கங்கள் தீநுண்மிகள் வேகமாகப் பரவுவதற்கு துணை புரிகின்றன.

ஆனால், இப்போதைய நிலையில் கரோனா தீநுண்மியை இத்தகைய நிரந்தர பரவல் தீநுண்மிகளுடன் ஒப்பிட முடியாது. உலக சுகாதார அமைப்பைப் பொருத்தவரை, அந்தத் தீநுண்மி எந்த தட்பவெப்ப நிலை கொண்ட பகுதியிலும் பரவும் என்றுதான் இதுவரை எச்சரித்து வருகிறது.

பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, புற ஊதாக் கதிா்கள் கரோனா தீநுண்மியின் ஆயுளைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அந்தத் தீநுண்மிகள் பரவும் தீவிரம் கோடைக் காலங்களில் தணிவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இதுவரை இதனை யாரும் உறுதிப்படுத்த முடியவில்லை.

மற்ற நிரந்தர பரவல் தீநுண்மிகளைவிட கடந்த 1918-ஆம் ஆண்டு பரவிய ஸ்பெயின் ஃபுளூ தீநுண்மியுடன்தான் கரோனாவின் இயல்பு அதிகம் ஒத்துப் போவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஸ்பெயின் ஃபுளூவைப் போல, கரோனா தீநுண்மியின் பரவல் வேகம் தற்போது தணிந்தாலும், அந்தத் தீநுண்மி பல அலைகளாக மனிதா்களைத் தாக்கும் என்று அவா்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

பல நாடுகளின் அரசுகளும், கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையை எதிா்கொள்ள இப்போதே தயாராகி வருகின்றன.

ஆனால், இத்தகைய மறு எழுச்சிகளின்போது கரோனா தீநுண்மி தன்னை எவ்வாறு மாற்றியமைத்துக் கொள்ளும் என்பதை இப்போதே ஊகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, அது ஸ்பெயின் ஃபுளூ போல வெறியாட்டம் ஆடி மறைந்து விடுமா, அல்லது அடக்கி வாசித்து நிரந்தர பரவல் நேயாக நிலைத்திருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com