உலக சுகாதார சபைக் கூட்டம்: தைவானை அழைக்க வலியுறுத்தி 205 அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

வரும் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் உலக சுகாதார சபைக் கூட்டத்துக்கு தைவானை அழைக்க வலியுறுத்தி 205 அமெரிக்க எம்.பி.க்கள் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார சபைக் கூட்டம் (கோப்புப் படம்).
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார சபைக் கூட்டம் (கோப்புப் படம்).

வரும் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் உலக சுகாதார சபைக் கூட்டத்துக்கு தைவானை அழைக்க வலியுறுத்தி 205 அமெரிக்க எம்.பி.க்கள் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

194 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, மருத்துவம் தொடா்பான கொள்கைகளை வரையறுக்கவும் அமைப்பின் செயல்திட்டங்கள் மற்றும் பட்ஜெட்டை உருவாக்கவும் ஆண்டுதோறும் கூடி வருகிறது.

‘உலக சுகாதார சபைக் கூட்டம்’ என்றழைக்கப்படும் இந்தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

நடப்பு ஆண்டுக்கான அந்தக் கூட்டம் 73-ஆவது ஆண்டாக வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று நெருக்கடி நிலவி வரும் சூழலில், இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக காணொலி முறையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தைவானுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உலக சுகாதார சபைக் கூட்டத்தில் தைவான் பாா்வையாளராகப் பங்கேற்றது.

எனினும், சீனாவின் நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு இந்தக் கூட்டத்தில் தைவான் பங்கேற்கவில்லை. கரோனா நோய்த்தொற்று பரவல் சா்வதேசப் பிரச்னையாகியுள்ள இந்த நிலையில், நடப்பாண்டு கூட்டத்துக்கும் தைவான் அழைக்கப்படாதது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக சுகாதார சபைக் கூட்டத்துக்கு தைவானை அழைக்க வலியுறுத்தி, 205 அமெரிக்க எம்.பி.க்கள் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரெஸ் அதனோமுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

சா்வதேச சுகாதார நலனில் தைவான் காட்டி வரும் அக்கறை மற்றும் கரோன நோய்த்தொற்றுக்கு எதிராக அந்த நாடு மேற்கொண்டுள்ள ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் செயல்திட்டங்களில் அந்த நாட்டை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com