கரோனா போரில் வென்ற நாடுகள்!

சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கரோனா (கொவைட் 19) நோய்த் தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளில் பரவியுள்ளது. மே 18 நிலவரப்படி
தைவான் அதிபர் சாய் இங்-வென்
தைவான் அதிபர் சாய் இங்-வென்

சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கரோனா (கொவைட் 19) நோய்த் தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளில் பரவியுள்ளது. மே 18 நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,05,229. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ரஷியா என வளர்ந்த நாடுகளே கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கரோனாவையும் உலகம் கடந்து செல்லும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிறிய நாடுகள் பல கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கின்றன. 

கரோனா தீநுண்மி முற்றிலுமாகக் கட்டுக்குள் வரும் என உறுதியாகச் சொல்ல முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், கரோனாவை வென்ற நாடுகள் என இப்போதே எளிதில் வகைப்படுத்திவிட முடியாது. ஏனெனில் கரோனா பரவலின் இரண்டாம் அலை சில நாடுகளில் நிகழத் தொடங்கியுள்ளது. இருப்பினும் கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சில நாடுகள் குறித்தும், அவை எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறித்தும் பார்க்கலாம்.

கியூபா
கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் அதிகம் பேசப்பட்டது கியூபா. 1.13 கோடி மக்கள்தொகை கொண்ட வட அமெரிக்க நாடான கியூபாவில் 1872 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 79 பேர் உயிரிழந்துள்ளனர், 1495 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இலவச மருத்துவ வசதி, உலக அளவில் ஒப்பிடுகையில் அதிக மருத்துவர்கள் விகிதம், உயிர்வாழும் சராசரி வயது அதிகம், குறைந்த சிசு மரணங்கள் என மருத்துவரீதியாக வலிமையான நாடு கியூபா. அதேவேளையில் வீட்டு வசதி உள்ளிட்ட பிற உள்கட்டமைப்புகள் மோசம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பாதிப்பு என பலவீனமும் அதிகம்.

சரிசமமான பலம், பலவீனத்துடன் கரோனாவை எதிர்கொண்டது கியூபா. "நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு' என்ற திட்டத்தை ஜன. 20-ஆம் தேதியே செயல்படுத்தத் தொடங்கியது. அதன்படி மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி, தனிமைப்படுத்துதல் மையங்களை ஏற்படுத்துதல், கரோனா அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் முதல் தொற்றே மார்ச் 11-ஆம் தேதிதான் உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பிறகு மருத்துவ மாணவர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து, நோய் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்துதல், சிகிச்சை என நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டது. நோய்த் தொற்று பாதிப்பு 21-ஐ நெருங்கியதுமே மார்ச் 20-இல் பொது முடக்கத்தை அறிவித்தது. கரோனாவுக்கு எதிரான போரில் ஒரு வழிகாட்டியாகத் திகழும் கியூபா தற்போது பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 59 நாடுகளுக்கு தனது 28 ஆயிரம் மருத்துவர்களை அனுப்பி சேவையாற்றி வருகிறது.

வியத்நாம்
சீனாவுடன் நீண்ட எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள வியத்நாம், கரோனாவை கட்டுப்படுத்திய வெற்றிக் கதை சுவாரசியமானது. 9.7 கோடி மக்கள்தொகை கொண்ட வியத்நாமில் கரோனாவால் 324 பேர்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்பதும் அதை தெளிவுபடுத்தும்.

கரோனாவுடன் போராடுவது என்பதைவிட வருமுன் காப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது வியத்நாம். ஜனவரி 11-இல் சீனாவின் வூஹானில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்தவுடனேயே, அந்நாட்டுடனான தனது வடக்கு எல்லையை வியத்நாம் மூடியது. அதுமுதலே பயணக் கட்டுப்பாடு, விமானப் பயணிகளுக்கு பரிசோதனை, எல்லைப் பகுதி மற்றும் பாதிப்பு அபாயம் அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜனவரி இறுதியிலேயே நாட்டில் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மார்ச் மத்தியில் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் மற்றும் நாட்டில் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வியத்நாம் போரில் அமெரிக்காவுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைக்க பயன்படுத்திய அதே உத்தியை, இந்தப் பொதுவான எதிரிக்கு (கரோனா) எதிராகவும் வியத்நாம் பயன்படுத்தியது. அதாவது, கைகளைக் கழுவிக் கொண்டு வீட்டிலேயே இருப்பது தேசபக்தி போன்று கட்டமைக்கப்பட்டது. அந்தத் தகவல் பலவழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

2003-இல் சீனா, ஹாங்காங் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சார்ஸ் நோய்த் தொற்று பரவியபோது அதை முதலில் கட்டுப்படுத்தியது வியத்நாம்தான். அதேபோல் கரோனாவையும் கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது.

உலகமும் 10 நாடுகளும்
உலகில் 213 நாடுகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மே 18-ஆம் தேதி நிலவரப்படி 48,05,229. இந்த அட்டவணையில் முதல் 10 இடங்களில் இருக்கும் நாடுகளின் மொத்த பாதிப்பு 34,23,198. இது 71 சதவீதமாகும். உலகில் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,16,732. முதல் 10 நாடுகளின் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,51,210. இது 79 சதவீதமாகும்.

உயிரிழப்பு இல்லாத 29 நாடுகள்
வியத்நாம், கம்போடியா, எரித்ரியா, பூடான், நமீபியா உள்ளிட்ட 29 நாடுகளில் கரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.செயின்ட் லூசியா, டொமினியா, கிரீன்லாந்து, பப்புவா நியூகினியா உள்ளிட்ட 16 நாடுகளில் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டனர்.

உலகை ஈர்த்த தைவான்
உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக இல்லாத நாடு தைவான். ஆனால், கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட அந்நாட்டின் நடவடிக்கைகளை இன்று உலகமே உற்று கவனித்து வருகிறது. 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட தைவான், சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடாக இருந்தபோதிலும் இதுவரை அந்நாட்டில் கரோனாவால் 440 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர், 395 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

கரோனாவுக்கு எதிராக வேகமாக செயல்பட்ட நாடுகளில் தைவான் முன்னிலை வகிக்கிறது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் புதுவிதமான நிமோனியா போன்ற நோய்த் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி காலை 8 மணிக்கு அந்நாட்டின் துணை பிரதமர் சென்-சி-மய்-க்கு கிடைத்தது. 

அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த நோய்த் தொற்று தங்கள் நாட்டுக்குள் பரவாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. மேலும், சீனாவிலிருந்து விமானத்தில் வரும் பயணிகள் மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதை அறிந்த தைவான் அரசு, அன்றைய தினமே வூஹானிலிருந்து விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதிக்கத் தொடங்கியது. 

ஜன. 21-ஆம் தேதி முதல் வூஹானிலிருந்து விமானம் வருவதற்கும், ஜன. 21 முதல் சீனாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கும் தடை விதித்தது. 

விரைவான செயல்பாடுகளால் கரோனாவை கட்டுப்படுத்தி உலகைக் கவர்ந்துள்ள தைவான், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்துக்கு அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com