கரோனாவின் தோற்றுவாய்: விசாரணைக்கு சீனா ஒப்புதல்

கரோனா நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
கரோனாவின் தோற்றுவாய்: விசாரணைக்கு சீனா ஒப்புதல்



ஜெனீவா/பெய்ஜிங்: கரோனா நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கரோனா நோய்த்தொற்று, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியதைத் தொடர்ந்து, சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்தது.

பின்னர் தொற்று மேலும் பல நாடுகளுக்குப் பரவியதை அடுத்து, அதை பெருந்தொற்று என்று அந்த அமைப்பு மார்ச் 11-ஆம் தேதி அறிவித்தது.
இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த நோய்த்தொற்றுக்கு உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கரோனா நோய்த்தொற்றை வூஹான் நகரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் உருவாக்கி உலக நாடுகளுக்கு சீனா பரவச் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அளிக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்ததுடன், அந்த அமைப்பு சீனாவுக்குப் பணிந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், உலக சுகாதார அமைப்பில் தைவானை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், தைவானை தனது எல்லைக்கு உள்பட்ட பகுதி என்று கூறி வரும் சீனா, அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, கரோனா தொற்று பரவல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73-ஆவது கூட்டம் ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கியது. வழக்கமாக, மூன்று வாரங்கள் நடைபெறும் இந்தக் கூட்டம், இந்த முறை இரண்டு நாள்கள் மட்டும் நடைபெறுகிறது. முதல் முறையாக காணொலி முறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

முதல் நாளான திங்கள்கிழமை, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது: 
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பரிந்துரைகளையும், அறிவுறுத்தல்களையும் பல்வேறு நாடுகள் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான வழிமுறைகளைக் கையாண்டன. சில நாடுகள் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு எதிரான வழிமுறைகளைக் கையாண்டன. அதற்கான விலையை நாம் அனைவரும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
அதைத் தொடர்ந்து, கரோனா நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தில், "கரோனா நோய்த்தொற்றைக் கையாண்டது எப்படி என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். கரோனா தொற்று எப்படி உருவானது, எந்தெந்த வழிகளில் மனிதர்களிடம் பரவுகிறது என்பது குறித்து அறிவியல்பூர்வமான களஆய்வும் விசாரணையும்  மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த ஆய்வுகள் உதவும்.

மேலும், ஐ.நா.வின் உணவு, வேளாண் அமைப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் சீனாவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. 

இந்த வரைவுத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், கனடா, ஜப்பான், மலேசியா, நியூஸிலாந்து, கத்தார், ரஷியா, சவூதி அரேபியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பணிந்தது சீனா
விசாரணை நடத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு முதலில் அதிருப்தி தெரிவித்த சீனா, சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்குப் பணிந்து, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் காணொலி முறையில் பங்கேற்று அதிபர் ஷி ஜின்பிங் பேசியதாவது:கரோனா தொற்று முதன்முதலில் தாக்கியதில் இருந்து வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் சீனா செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணையை சீனா முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில், கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்து நிலைமை சீரான பிறகு விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும். முதலில் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில், சுதந்திரமான விசாரணை கோரும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் சீனாவும் பங்கேற்றது. விவாதத்தில் இடம்பெற்ற அனைத்து நாடுகளும் உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com