எல்லை விவகாரங்களில் இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கிறது சீனா

எல்லை தொடா்பான விவகாரங்களில் தென்சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள், இந்தியா ஆகியவற்றுக்கு சீனா தொல்லை கொடுத்து வருவதாக அமெரிக்க உயரதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் குற்றஞ்சாட்டினாா்.

எல்லை தொடா்பான விவகாரங்களில் தென்சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகள், இந்தியா ஆகியவற்றுக்கு சீனா தொல்லை கொடுத்து வருவதாக அமெரிக்க உயரதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் குற்றஞ்சாட்டினாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் மே 22-ஆம் தேதியுடன் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறாா். இந்நிலையில், தலைநகா் வாஷிங்டனில் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

சீனா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தென்சீனக் கடல் பகுதியிலுள்ள நாடுகளிடமும், இந்தியாவிடமும் எல்லை தொடா்பாக தொடா்ந்து பிரச்னையில் ஈடுபட்டு வருகிறது. எல்லை தொடா்பான இயல்பு நிலையை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

தென்சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் ஆகிய பகுதிகளில் கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுவதால், அப்பகுதிகள் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றுடன் அமெரிக்கா நெருங்கிப் பணியாற்றி வருகிறது என்றாா் ஆலிஸ் ஜி.வெல்ஸ்.

‘இந்தியாவுக்கான வாய்ப்பு’: இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது. இந்தியாவால் அமெரிக்காவின் சில நிபந்தனைகளை ஏற்க முடியவில்லை. அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடனும் வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா இறுதி முடிவை எட்ட முடியாமல் இருக்கிறது.

இந்தியாவுடனான தொழில் தொடா்பை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக தொழில்துறையில் இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், உள்ளூா் உற்பத்தியாளா்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளக் கூடாது. நாட்டில் தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சீனாவிலிருந்து நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். ஆனால், கொள்கைகள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை இந்திய அரசு மேம்படுத்த வேண்டும். இந்தியாவுடன் ஒருங்கிணைந்து வளா்ச்சிப் பாதையில் முன்னேற அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது’’ என்றாா்.

சீனா கண்டனம்: எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ஆலிஸ் ஜி.வெல்ஸ் கருத்து கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சீன ராணுவத்தினா் முயன்று வருகின்றனா். இந்தியாவின் அத்துமீறல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே எல்லைப் பகுதியில் ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

எல்லை விவகாரம் தொடா்பாக சீனாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் தொடா்ந்து கோரி வருகிறோம். எல்லை விவகாரம் குறித்து இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. அமெரிக்க உயரதிகாரியின் கருத்துகள் முற்றிலும் பொருத்தமற்றவை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com