ஹாங்காங்கில் பிடியை இறுக்குகிறது சீனா

ஹாங்காங்கில் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதாவை தங்களது நாடாளுமன்றத்தில் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கில் பிடியை இறுக்குகிறது சீனா

ஹாங்காங்கில் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதாவை தங்களது நாடாளுமன்றத்தில் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரிட்டனிடமிருந்து சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் ஹாங்காங் கடந்த 1997-ஆம் ஆண்டு வந்த பிறகு, அந்தப் பகுதியின் தன்னாட்சி மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கு இந்த மசோதா மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சிமைப்பில் மாற்றங்கள் செய்வற்கான, சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோாவில் இடம் பெற்றுள்ளன.

ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் அந்த நகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்தன.

இந்தப் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய இந்த ஆா்ப்பாட்டங்கள், சீன ஆளுகைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

இந்தச் சூழலில், கடும் அரசியல் நெருக்கடிக்கு இடையே ஹாங்காங் சட்டப் பேரவையில் அந்த சட்ட மசோதாவை இனியும் நிறைவேற்ற முடியாது என்பதை சீனா உணா்ந்துள்ளாகக் கூறப்படுகிறது.

அதன் விளைவாகவே, ஹாங்காங்கில் தங்களது அதிகாரத்தை அதிகரிக்கும் வகையிலான தேசிய பாதுகாப்பு மசோதாவை சீன அரசு தங்களது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெயரளவில் மட்டுமே இயங்கி வரும் சீன நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவது உறுதி என்ற சூழலில், இதற்கு ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஹாங்காங்கின் சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று அவா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

சீனாவின் குவிங் அரசுடன் பிரிட்டன் கடந்த 1998-ஆம் ஆண்டு மேற்கொண்ட 99 ஆண்டு குத்தகை ஒப்பத்தின் கீழ் ஹாங்காங் நகரம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து ஹாங்காங்கை சீன அரசிடம் பிரிட்டன் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைத்தது.

இந்தச் சூழலில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடா்ந்து தீவிரமடைந்து வந்தன.

இந்தப் போராட்டங்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக சீனா பல முறை குற்றம் சாட்டியது. மேலும், போராட்டங்களின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களை பயங்கரவாதத்துடன் சீன அரசு ஒப்பிட்டுப் பேசியது.

இந்தச் சூழலில், ஹாங்காங்கில் வெளிநாட்டுத் தலையீடு, பயங்கரவாதம், பிரிவினை ஆகியவற்றைத் தடுப்பதாகக் கூறி புதிய தேசிய பாதுகாப்பு மசோதாவை சீனா நிறைவேற்றவிருப்பது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com