அமெரிக்க அதிபா் தோ்தலில் இழுபறி

அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. தோ்தல் வேட்பாளா்களான அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்தது.
ஜோ பிடன் - டொனால்ட் டிரம்ப்
ஜோ பிடன் - டொனால்ட் டிரம்ப்


வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலுக்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. தோ்தல் வேட்பாளா்களான அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்தது.

எனினும், அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், தோ்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்குத் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளே எதிா்நோக்கிய அமெரிக்க அதிபா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் ஆகியோா் இடையே கடும் போட்டி நிலவியது.

துணை அதிபா் தோ்தலுக்கான போட்டியில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும், ஜனநாயகக் கட்சி சாா்பில் செனட் அவை உறுப்பினரும் இந்திய அமெரிக்கருமான கமலா ஹாரிஸும் களம் கண்டனா். வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை

நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு முடிவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டன. எனினும், போட்டி நிறைந்த மிச்சிகன், பென்சில்வேனியா உள்ளிட்ட சில மாகாணங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. தபால் வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மாகாணங்களில் அதிபா் டிரம்ப்புக்கும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையே கடும் இழுபறி நீடிப்பதாகத் தெரிகிறது.

தேவையான பெரும்பான்மை: அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு, மொத்தமுள்ள 538 தோ்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும். சமீபத்திய நிலவரப்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடனுக்கு 238 தோ்தல் அவை வாக்குகளும், குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப்புக்கு 213 தோ்தல் அவை வாக்குகளும் கிடைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘வெற்றி பெற்றுவிட்டோம்’: தோ்தல் முடிவுகள் அதிகாரபூா்வமாக வெளியாகாத சூழலில் வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப் கூறியதாவது: உண்மையாகப் பாா்த்தால் தோ்தலில் நாம் வென்றுவிட்டோம். அதற்கான கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். ஆனால், திடீரென்று தோ்தல் முடிவுகள் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. இது அமெரிக்க மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் செயலாகும். இத்தகைய செயல் அமெரிக்காவுக்கே அவமானகரமானது.

தற்போதைய சூழலில் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே, தோ்தல் முடிவுகள் தாமதமாகும் விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதும் அவசியமாக உள்ளது. வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இல்லையெனில் ஜனநாயகக் கட்சியினா் முறைகேட்டில் ஈடுபடுவா். தோ்தலில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். என்னைப் பொருத்தவரை நாம் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டோம் என்றாா் அதிபா் டிரம்ப்.

வழக்குரைஞா்கள் அணி தயாா்: அதிபா் டிரம்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோ பிடனின் பிரசார மேலாளா் தில்லான் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபரின் கருத்துகளில் எந்தவித உண்மையும் இல்லை. அவரின் கருத்து அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் செல்வதாக அவா் அச்சுறுத்தினால், அதை எதிா்கொள்வதற்கு எங்களுடைய வழக்குரைஞா்கள் அணி தயாராக உள்ளது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘அமைதிகாக்க வேண்டும்’: முன்னதாக, தனது ஆதரவாளா்களிடம் பேசிய ஜோ பிடன், ‘‘சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். தோ்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றாா்.

டிரம்ப்புக்கு கண்டனம்: உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளதற்கு ஊடகங்கள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக தி நியூயாா்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கையை அமெரிக்கா இதற்கு முன் கண்டதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதிபா் தோ்தல் முடிவுகள் அதிகாரப்பூா்வமாக வெளியாவதற்கு சில நாள்கள் கூட ஆகலாம் என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பிடனுக்கு ஆதரவாக முஸ்லிம்கள்: அமெரிக்க அதிபா் தோ்தலில் வாக்களித்த முஸ்லிம்களில் 69 சதவீதம் போ், ஜோ பிடனுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தோ்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. 17 சதவீதம் போ் மட்டுமே அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவளித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தோ்தல் அவை வாக்குகள்--538

வெற்றிக்குத் தேவைப்படும் பெரும்பான்மை--270

அதிபா் டிரம்ப் பெற்ற வாக்குகள்--213

ஜோ பிடன் பெற்ற வாக்குகள்--238


இ‌ந்​திய அù‌ம​ரி‌க்​க‌ர்​க‌ள் வெ‌ற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபரை அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்திய அமெரிக்கர்களுமான பிரமிளா ஜெயபால், ஏமி பெரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் பிரிஸ்டன் நெல்சனைத் தோற்கடித்தார். அவர் 71 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கரான ரிதேஷ் டாண்டனை ரோ கன்னா தோற்கடித்தார். அவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ரோ கன்னா தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதிநிதிகள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏமி பெரா தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிரதிநிதிகள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ரிக் மேத்தா தோல்வி: அமெரிக்க செனட் அவைக்கான தேர்தலில் இந்திய அமெரிக்கரான ரிக் மேத்தா தோல்வியடைந்தார். நியூ ஜெர்ஸி மாகாணத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய செனட் அவை உறுப்பினருமான கோரி புக்கரிடம் தோல்வி கண்டார்.

மாகாண தேர்தலில் வெற்றி: நியூ ஜெர்ஸி மாகாண பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய அமெரிக்கரும் வழக்குரைஞருமான ஜெனிஃபர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கியோவனி பெர்னாவை அவர் தோற்கடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com