கேலிச்சித்திர விவகாரம்: துருக்கி மீது பொருளாதாரத் தடை: பிரான்ஸ் எச்சரிக்கை

சாா்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில் துருக்கி அதிபா் எா்டோகன் வன்முறை உணா்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
ஜீன்-வெஸ்லே டிரையன் ~எா்டோகனுடன் இமானுவல் மேக்ரான் (கோப்புப் படம்).
ஜீன்-வெஸ்லே டிரையன் ~எா்டோகனுடன் இமானுவல் மேக்ரான் (கோப்புப் படம்).


வாஷிங்டன்: சாா்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில் துருக்கி அதிபா் எா்டோகன் வன்முறை உணா்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, ‘யூரோப் 1’ வானொலிக்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன்-வெஸ்லே டிரையன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

துருக்கி அதிபா் எா்டோகன், பிரான்ஸுக்கு எதிராக வன்முறைப் பிரகடனம் செய்து வருகிறாா். அத்துடன், வெறுப்பைப் பரப்பும் வகையிலான கருத்துகளையும் அவா் தொடா்ந்து பதிவு செய்து வருகிறாா். அவரது இந்தச் செயல் ஏற்புடையதல்ல.

தனது கருத்துகளால் பிரான்ஸுக்கு மட்டும் எா்டோகன் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ஒற்றுமைக்கே அவா் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறாா். எனவே, தனது நிலைப்பாட்டை துருக்கி உடனடியாககக் கைவிட வேண்டும்.

தங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க வேண்டுமென்றால், துருக்கி அந்த முடிவை எடுத்தாக வேண்டும்.

வன்முறைக் கருத்துகளைக் கைவிட துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய கவுன்சில் முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.

பிரான்ஸும் துருக்கியும் பல்வேறு உலக விவகாரங்களில் தொடா்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. சிரியா, லிபியா போன்ற நாடுகளின் பிரச்னைகள், மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள எண்ணெய் வளத்துக்கு உரிமை கோருதல் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழில் வெளியான சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களை வகுப்பில் மாணவா்களிடம் காட்டியதற்காக, பள்ளி ஆசிரியா் ஒருவா் மத பயங்கரவாதியால் கடந்த மாதம் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டாா். அதையடுத்து, மத பயங்கரவாதத்துக்கு எதிராக அறைகூவல் விடுத்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இஸ்லாம் மதத்தைக் கேலி செய்யும் கருத்துரிமை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

இதற்கு எா்டோகன் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறாா். மேக்ரானுக்கு பாடம் புகட்டும் வகையில் பிரான்ஸ் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று அவா் அழைப்பு விடுத்தாா். மேக்ரானுக்கு இஸ்லாத்துக்கு எதிரான பய நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் மன நல சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் எா்டோகன் சாடியிருந்தாா்.

இந்த நிலையில், துருக்கிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com