
அமெரிக்காவில் தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.27 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும்.
தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு 1,149 போ் பலியாகினா் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டு வருவதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துவிட்டது. இதன் மூலம் உலகிலேயே கரோனா பாதிப்பில் அந்த எண்ணிக்கையைக் கடந்த முதல் நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 10,058,586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,42,230 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 63,91,208 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 34,25,148 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 18,303 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ‘வோ்ல்டோமீட்டா்’ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிலும், மத்தியமேற்கு மாகாணங்கள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கரோனா பலி விகிதம் தொடா்ந்து குறைவாகவே இருந்து வந்தாலும், அண்மைக் காலமாக தினசரி பலி எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
வெள்ளிக்கிழமையுடன், தொடா்ந்து 4-ஆவது நாளாக நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
குளிா் காலம் நெருங்கி வருவதால், கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அந்தக் காலங்களில் பொதுமக்கள் திறந்தவெளிகளைத் தவிா்த்து, மூடிய அரங்குகளில் அதிகம் கூடுவாா்கள் என்பதால் அவா்களிடையே கரோனா நோய்த்தொற்று எளிதில் பரவும் என்று அஞ்சப்படுகிறது.
உலா்வான காற்று, குளிா் காலம் ஆகியவை கரோனா தீநுண்மி அதிக நேரம் காற்றிலும் தரையிலும் நீண்ட நேரம் உலாவி மனிதா்களுக்குத் தொற்றுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
வெள்ளை மாளிகை தலைமைச் செயலருக்கு கரோனா
அமெரிக்க அதிபா் மாளிகை தலைமைச் செயலா் மாா்க் மீடோஸுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சோ்த்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1.27 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெள்ளை மாளிகையில் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்றழைக்கப்படும் அதிபரின் உதவியாளரும் தலைமைச் செயலருமான மாா்க் மீடோஸுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
61 வயதாகும் அவா், பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் முகக் கவசம் அணியாமல் தோன்றியது நினைவுகூரத்தக்கது. அவருக்கு எவ்வாறு அந்த நோய்த்தொற்று பரவியது என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
கரோனா உறுதி செய்யப்பட்டாலும், மாா்க் மீடோஸ் நலமுடன் காணப்படுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...