அமெரிக்க அதிபா் தோ்வாளா் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? - சீனா, ரஷியா விளக்கம்

அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூா்வமாக உறுதியாகாததன் காரணமாகவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சீனாவும் ரஷியாவும் விளக்கமளித்துள்ளன.
ஜோ பிடன்
ஜோ பிடன்

பெய்ஜிங்: அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூா்வமாக உறுதியாகாததன் காரணமாகவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சீனாவும் ரஷியாவும் விளக்கமளித்துள்ளன.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாா். தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறாா். தோ்தல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அவா் அறிவித்துள்ளாா்.

இத்தகைய சூழலில், ஜோ பைடனுக்கு பல நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். ஆனால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சீனா, ரஷியா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து மறுத்து வருகின்றன. இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பினிடம் செய்தியாளா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்தோம். எனினும், அமெரிக்காவின் சட்டங்கள், விதிமுறைகளின் அடிப்படையில் புதிய அதிபா் யாா் என்பது இன்னும் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை. சா்வதேச நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் சீனா முடிவெடுக்கும்.

சீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள்ளான பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தையின் மூலமாகத் தீா்வு காண வேண்டும் என்பதை நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருதரப்புக்கும் பலனளிக்கும் வகையிலும் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் பேச்சுவாா்த்தையின் முடிவுகள் அமைய வேண்டும்’’ என்றாா்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வாங் வென்பின், ‘‘பாலின சமத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் சீனா உறுதி கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் சீனா முன்னணியில் நிற்கும்’’ என்றாா்.

ரஷியா விளக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘அமெரிக்காவின் தற்போதைய அதிபா், தோ்தல் தொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளாா். எனவே, அது தொடா்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து வெற்றியாளா் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு அதிபா் புதின் வாழ்த்து தெரிவிப்பாா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com