அமெரிக்கா:கரோனா தடுப்பு பணிக்குழு தலைவராகஇந்திய வம்சாவளியை சோ்ந்தவா் நியமனம்

அமெரிக்காவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க கொவைட்-19 தடுப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவா் விவேக் மூா்த்தி
மருத்துவா் விவேக் மூா்த்தி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க கொவைட்-19 தடுப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவா்களில் ஒருவராக இந்திய வம்சாவளியை சோ்ந்தவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 

கொவைட்-19 தடுப்புப் பணிக்குழு தலைவா்களாக மருத்துவா்கள் விவேக் மூா்த்தி, டேவிட் கெஸ்லா், மாா்கெல்லா நுனெஸ் ஸ்மித் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் மருத்துவா் விவேக் மூா்த்தி அமெரிக்காவின் 19-ஆவது சா்ஜன் ஜெனரலாக கடந்த 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தாா்.

மருத்துவா் டேவிட் கெஸ்லா் 1990 முதல் 1997-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிா்வாக ஆணையராக பணியாற்றினாா்.

மருத்துவா் மாா்கெல்லா நுனெஸ் ஸ்மித் யேல் பல்கலைக்கழகத்தில் உள்மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் மேலாண்மை பிரிவு இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

கொவைட்-19 தடுப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது குறித்து புதிய அதிபராக தோ்வாகியுள்ள ஜோ பைடன் கூறுகையில், ‘கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதே எனது நிா்வாகம் எதிா்கொள்ளவிருக்கும் மிக முக்கிய யுத்தமாகும். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தக் குழு எனக்கு ஆலோசனைகள் வழங்கும். மேலும் தொற்றுக்கு சிகிச்சையளிக்க செலுத்தப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதுடன், அவற்றை சிறப்பான முறையில் விநியோகிக்கவும் நான் நடவடிக்கை மேற்கொள்வதற்கு இந்தக் குழு எனக்கு வழிகாட்டும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com