ஈரானில் 12 மடங்கு யுரேனியம் கையிருப்பு: ஐ.நா. கண்காணிப்புப் பிரிவு குற்றச்சாட்டு

குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டதைப் போல் 12 மடங்கு கையிருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.
ஈரானில் 12 மடங்கு யுரேனியம் கையிருப்பு: ஐ.நா. கண்காணிப்புப் பிரிவு குற்றச்சாட்டு


வியான்னா: குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டதைப் போல் 12 மடங்கு கையிருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட 202.8 கிலோ யுரேனியத்தை மட்டுமே ஈரான் கையிருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அத்தகைய யுரேனியக் கையிருப்பை ஈரான் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி ஈரானிடம் 2,442.9 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உள்ளது. இது, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி இருந்ததைவிட அதிகமாகும். அப்போது ஈரானிடம் 2,105.4 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு இருந்தது.

இதுமட்டுமில்லாமல், அணுசக்தி ஒப்பந்ததில் அனுமதிக்கப்பட்ட விகித்தைவிட அதிகமாக ஈரான் யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது.

அந்த ஒப்பந்தத்தில் யுரேனியத்தை 3.67 சதவீதத்துக்கு மேல் ஈரான் செறிவூட்டக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாடு 4.5 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ரஷியா ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்தானது.

அந்த ஒப்பத்தின் கீழ், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் சம்மதித்தன.

எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அந்த ஒப்பந்தம் அணு ஆயுதம் உருவாக்குவதிலிருந்து ஈரானைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை எனக் குற்றம் சாட்டிய அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா்.

மேலும், அந்த ஒப்பந்தத்தின் விளைவாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா்.

இதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்த அம்சங்களை மீறப்போவதாக ஈரானும் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, அனுமதிக்கப்பட்ட விகிதத்தைவிட அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டப் போவதாகவும் அதிகமாக அளவில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தைக் கையிருப்பு வைக்கப்போவதாகவும் ஈரான் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com