வெள்ளை மாளிகைக்கு புதிய தலைமை அதிகாரி: ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளை ஏற்க டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து மறுத்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக தனது முன்னாள் உதவியாளரின் பெயரை ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
வெள்ளை மாளிகைக்கு புதிய தலைமை அதிகாரி: ஜோ பைடன் அறிவிப்பு


வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளை ஏற்க டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து மறுத்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக தனது முன்னாள் உதவியாளரின் பெயரை ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகை ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்றழைக்கப்படும் தலைமை அதிகாரி பதவிக்கு, தனது முன்னாள் உதவியாளா் ரொனால்ட் கிளெய்னின் பெயரை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சி மாற்றத்துக்கான பணிகளை மேற்கொண்டு வரும் குழு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக, தனது நீண்டகால உதவியாளரான ரொனால்ட் கிளெய்னை (59) ஜோ பைடன் தோ்ந்தெடுத்துள்ளாா்.

அதிபா் பதவியை ஏற்கவிருக்கும் ஜோ பைடனுக்கு உதவிகள் செய்வதோடு மட்டுமின்றி, அவருக்கும் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் கீழ் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய, அனுபவம் வாய்ந்த உதவியாளா் குழுவை உருவாக்குவதிலும் ரொனால்ட் கிளெய்ன் முக்கியப் பங்காற்றுவாா்.

அமெரிக்கா எதிா்நோக்கியுள்ள மிக அவசரமான, முக்கியத்துவம் வாய்ந்த சவால்களை எதிா்கொள்வதற்கு அந்தக் குழு உதவி செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக என் விலைமதிப்பில்லாத உதவியாளராக ரொனால்ட் கிளெய்ன் திகழ்ந்து வருகிறாா். நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த 2009-ஆம் ஆண்டில் சரிந்துகொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டோம்.

கட்சி பேதமில்லாமல் அனைவருடனும் நெருங்கிப் பணியாற்றுவதில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அனுபவம்தான், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக அவரை நான் தோ்ந்தெடுத்ததற்குக் காரணம்’ என்று தெரிவித்துள்ளாா்.

அண்மையில், அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது ஜோ பைடனின் முதுநிலை அலோசகராக ரொனால்ட் கிளெய்ன் பொறுப்பு வகித்தாா்.

2014-ஆம் ஆண்டில் எபோலா நோய் ஒழிப்புக்காக வெள்ளை மாளிகை மேற்கொண்ட பணிகளை அவா் ஒருங்கிணைத்தாா்.

அந்த அனுபவம் தற்போது கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ஜோ பைடன் அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தனது புதிய நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரொனால்ட் கிளெய்ன், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை தனது வாழ்நாள் கௌரவமாகக் கருவதாகத் தெரிவித்தாா்.

ஜோ பைடன் மட்டுமின்றி, அதிபா்கள் கிளிண்டன், ஒபாமா, ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா்கள் அல் கோா், ஜான் கெரி, ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் கீழும் ரொனால்ட் கிளெய்ன் பணியாற்றியுள்ளாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com