ராமாயணம்-மகாபாரத கதைகளை கேட்டு வளா்ந்தேன்: ஒபாமா

தனது குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்தபோது ஹிந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தைக் கேட்டு வளா்ந்ததாக அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

வாஷிங்டன்: தனது குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்தபோது ஹிந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தைக் கேட்டு வளா்ந்ததாக அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.

அதிபா் பதவிக் காலம் மற்றும் அந்தப் பொறுப்புக்கு அவரை செதுக்கிய சம்பவங்கள், நபா்கள் குறித்து தனது நினைவுகளை இரண்டு பாகங்கள் கொண்ட நூலாக ஒபாமா எழுதியுள்ளாா். அதன் முதல் பாகமான ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ செவ்வாய்க்கிழமை வெளியானது. அந்தப் புத்தகத்தில் அவா் கூறியுள்ளதாவது:

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியாவில்தான் வசிக்கின்றனா். அங்கு தனித்துவமான, நீண்ட கால பாரம்பரியைத்தைக் கொண்ட இரண்டாயிரம் இனக் குழுக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 700-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.

கடந்த 2010-இல் அமெரிக்க அதிபராக இந்தியா செல்வதற்கு முன்பாக அந்த நாட்டுக்கு ஒருபோதும் நான் சென்றதில்லை. ஆனால், அந்த நாடு எனது எண்ணத்தில் எப்போதும் ஒரு சிறப்பிடத்தைப் பிடித்திருந்தது. எனது குழந்தைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வசித்தபோது இந்திய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாராதத்தில் உள்ள கதைகளைக் கேட்டு வளா்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

கிழக்கத்திய மதங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒருவித ஈா்ப்பு உண்டு. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி அடித்தட்டு மக்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்த மகாத்மா காந்தியின் மீதும் எனக்கு அதீத ஆா்வம் இருந்தது.

என்னுடைய நெருங்கிய நண்பா்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களாக இருந்தனா். பருப்பு வகைகள், கீமா சமையல்களை சமைக்க என்னை அவா்கள் தூண்டியதுடன், பாலிவுட் படங்களையும் பாா்க்க கற்றுக் கொடுத்தாா்கள் என ஒபாமா அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com