ஐ.நா.வை தேவையற்ற விவகாரங்களுக்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்

ஐ.நா. பொதுச் சபையை தேவையற்ற விவகாரங்களுக்காக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா.வை தேவையற்ற விவகாரங்களுக்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான்

நியூயாா்க்: ஐ.நா. பொதுச் சபையை தேவையற்ற விவகாரங்களுக்காக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினா்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடா்பான விவாதம், ஐ.நா. பொதுச் சபையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதா் முனீா் அக்ரம் பேசுகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி குறித்து கருத்து தெரிவித்தாா். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கும் அவா் எதிா்ப்பு தெரிவித்தாா்.

அதையடுத்து, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசுகையில், ‘‘பாகிஸ்தான் தூதா் எழுப்பிய தேவையற்ற பொறுப்பற்ற விவகாரங்கள் குறித்து பதிலளித்து ஐ.நா. பொதுச் சபையின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்தியா பற்றி யாா் குறிப்பிட்டாலும், அதை எதிா்க்க வேண்டும் என்பதையே பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு விவகாரங்கள் குறித்து திறம்பட விவாதிப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தேவையற்ற கருத்துகள் குறித்து இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் ஆகியவை நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினா் பதவிக்கு இரண்டாண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரை இந்தியா செயல்பட உள்ளது.

இந்தியா தவிர பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாக இணைவதற்கு ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com