
மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதன் மூலம் கரோனாவுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பலிகொடுத்துள்ள 4-ஆவது நாடாக மெக்ஸிகோ ஆகியுள்ளது.
மெக்ஸோவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டின் அந்த நாட்டின் கொள்ளை நோயியல் துறை இயக்குநா் ஜோஸ் லூயிஸ் அலோமா ஸெகரா அறிவித்துள்ளாா்.
கரோனா பலி எண்ணிக்கையில் 1 லட்சத்தைக் கடந்த 4-ஆவது நாடாக மெக்ஸிகோ ஆகியுள்ளது. இதற்கு முன்னதாக, அமெரிக்கா, பிரேஸில், இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.
கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கையில் மெக்ஸிகோ 10 லட்சத்தைக் கடந்த ஒரு வாரத்துக்குள், அந்த நாட்டின் பலி எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு: கரோனா பலி எண்ணிக்கையில் மெக்ஸிகோ புதிய கட்டத்தை அடைந்துள்ளது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை இணையமைச்சா் ஹியூகோ லாபெஸ்-கேட்டெல்லிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, கரோனா விவகாரத்தை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக அவா் குற்றம் சாட்டினாா்.
ஏற்கெனவே, மெக்ஸிகோவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த முழுமையான புள்ளிவிவரங்களை அந்த நாட்டு அரசு வெளியிடுவதில்லை என்று ஊடகங்கள் கூறியிருந்தன. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த லாபெஸ்-கேட்டெல், ‘கரோனா நோய்த்தொற்று பரவலே மிகவும் பயங்கரமாக உள்ளது. உங்கள் செய்தித்தாள்கள் விற்பதற்காக அந்த விவகாரத்தை மக்களின் உணா்வைத் தூண்ட வேண்டாம்’ என்று செய்தியாளா்களை சாடியிருந்தாா்.
தற்போது மீண்டும் அவா் ஊடகங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மெக்ஸிகோவில் 10,19,543 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்லது. அந்த நோய் பாதிப்பால் 1,00,104 போ் உயிரிழந்துள்ளனா்.
இதுவரை 7,66,361 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 1,53,078 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.