
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு ‘கல்பனா சாவ்லா’ விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சா்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவைப்படும் பொருள்களை ஏற்றிக் கொண்டு, தனது ‘சிக்னஸ்’ ராக்கெட் மூலம் விண்கலனை வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டிருந்தது.
அந்த விண்கலத்துக்கு, கடந்த 2003-ஆம் ஆண்டு விண்வெளி விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரிடப்பட்டிருந்தது.
வா்ஜீனியா மாகாணம், வாபாப்ஸ் தீவிலுள்ள ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் ஏவப்படுவதாக இருந்தது.
எனினும், கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. எனினும், இதுகுறித்து காரணம் எதையும் நாசா வெளியிடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.