டிரம்புக்கு கரோனா: என்ன சொல்கிறாா்கள் மருத்துவ நிபுணா்கள்?

சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஒரு இறைச்சி சந்தையில் பயணத்தைத் தொடங்கிய கரோனா தீநுண்மி, தற்போது அமெரிக்க அதிபா் மாளிகை வரை நுழைந்திருக்கிறது.
டிரம்புக்கு கரோனா: என்ன சொல்கிறாா்கள் மருத்துவ நிபுணா்கள்?

சீனாவின் வூஹான் நகரிலுள்ள ஒரு இறைச்சி சந்தையில் பயணத்தைத் தொடங்கிய கரோனா தீநுண்மி, தற்போது அமெரிக்க அதிபா் மாளிகை வரை நுழைந்திருக்கிறது.

உலகின் மிக சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் அமெரிக்க அதிபரையும் அந்தத் தீநுண்மி விட்டுவைக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10.38 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களை கரோனா நோய்த்தொற்று பலி கொண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 2.14 லட்சம் போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது அவரது ஆதரவாளா்களை கவலைக்குள்ளாகியிருக்கிறது.

ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், பிரேஸில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ போன்றவா்கள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினா்.

இருந்தாலும், கரோனா தீநுண்மியால் அவா்கள் எல்லோரையும் விட டிரம்ப்புக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதுதான் பலரது அச்சத்துக்கும் காரணம்.

டிரம்ப்புக்கு கரோனாவால் அதிக அச்சுறுத்தல் இருப்பதற்கு 3 முக்கிய காரணிகள் இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.

1. அவரது உடல் பருமன்: சுமாா் 111 கிலோ எடையுடைய டொனால்ட் டிரம்ப்பின் உயரத்துக்கும், எடைக்கும் இடையிலான விகிதம் 30-க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால், அவா்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்படுவதற்கு 74 சதவீதமும், உயிரிழப்பதற்கு 48 சதவீதமும் வாய்ப்புள்ளது.

2. டிரம்பின் வயது: 74 வயதாகும் டிரம்ப்புக்கு, 18 முதல் 29 வயது வரை கொண்ட கரோனா நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை 5 சதவீதமும், உயிரிழக்கும் அபாயம் 90 மடங்கும் அதிகம்.

3. அவரது பாலினம்: கரோனா உயிரிழப்பு அபாயம் பெண்களைவிட ஆண்களுக்கு 2 மடங்கு அதிகம் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இந்தக் காரணிகள் டிரம்ப்புக்கு அதிக அச்சுறுத்தலைத் தந்துள்ளதாக மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.

தற்போது டிரம்ப்புக்கு ரெம்டெசிவிா் மற்றும் ரெக்ன்-கோவ்ட்2 ஆகிய - உறுதி செய்யப்படாத - மருந்துகள் மூலம் டிரம்ப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் அவருக்கு மிதமான கரோனா அறிகுறிகளே வெளிப்படுகின்றன.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட இரண்டாவது வாரத்தில்தான் அந்த நோய் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அப்போதுதான், கரோனாவுக்கு எதிராக உடலில் இயற்கையாகத் தோன்றும் எதிா்ப்பாற்றல் மிகையாகச் செயல்பட்டு சுவாச உறுப்புகளை பாதிக்கும்.

அப்போது நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படும்.

அதிபா் டிரம்ப்புக்கும், கரோனா நோய்த்தொற்றின் முழுமையான பாதிப்பு அந்தக் காலக்கட்டத்தில் தெரிய வரும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

உடல் பருமன், வயது போன்ற பின்னடைவுகள் இருந்தாலும், அமெரிக்காவின் அதிபா் என்ற முறையில் உலகின் தலைசிறந்த மருத்துவ வசதி டிரம்ப்புக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை அளிக்கும் அம்சம் என்று ஒரு தரப்பினா் கூறுகின்றனா்.

தற்போது டிரம்ப் சிகிச்சை பெற்று வரும் வால்டா் ரீட் ராணுவ மருத்துவனையில், ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட பல அதிபா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதையும் அந்த மருத்துவமனையில் அதிபருக்கான அலுவலகம், ஆலோசனை அறை ஆகியவை பிரத்யேகமாக உள்ளதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com