தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய போராட்டம்

இந்தோனேசியாவில் புதிதாக திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய போராட்டம்
இந்தோனேசியாவில் வன்முறையாக மாறிய போராட்டம்

இந்தோனேசியாவில் புதிதாக திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்தோனேசியா நாட்டில் சமீபத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்புக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது, ஒப்பந்தப்பணிகளை அதிகரிப்பது, மாத சம்பளத்தை மணிநேர ஊதியமாக மாற்றுவது ஆகியவை தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திங்களன்று இந்தோனேசிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலை உருவாக்கும் சட்டம் இந்தோனேசியாவின் தொழிலாளர் அமைப்பையும் இயற்கை வள நிர்வாகத்தையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் பல்வேறு நகரங்களில் அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜகார்த்தாவில் அதிபர் மாளிகையின் அருகே நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

போராட்டக்காரர்கள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், திரையரங்குகள் மற்றும் பல அரசு அலுவலகங்களை சேதப்படுத்தினர்.

அரசாங்கம் திருத்தப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக் கோரி மூன்று நாள் தேசிய வேலைநிறுத்தத்திற்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சர் முகமது மஹ்புத், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசு மற்றும் காவல்துறை பொறுத்துக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார்.

யோககர்த்தா, மேதன், மக்காசர், மனாடோ மற்றும் பண்டுங் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் இதேபோன்ற மோதல்கள் நிகழ்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com