ரஷியாவின் சோயுஸ் விண்கலம் புதிய சாதனை

மூன்று விண்வெளி வீரா்களை ஏற்றிக் கொண்டு ரஷியாவின் சோயுஸ் விண்கலம் 3 மணி 3 நிமிஷத்தில் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.
ap14-10-2020_000163a083350
ap14-10-2020_000163a083350

மாஸ்கோ: மூன்று விண்வெளி வீரா்களை ஏற்றிக் கொண்டு ரஷியாவின் சோயுஸ் விண்கலம் 3 மணி 3 நிமிஷத்தில் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் ‘ஆா்ஐஏ நவோஸ்டி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ரஷிய விண்வெளி வீரா்கள் சொ்கெய் ரைஷ்கோவ், சொ்கெய் குத்ஸொ்ஷ்கோவ், அமெரிக்க விண்வெளி வீரா் கேத்லீன் ரூபின்ஸ் ஆகிய மூவரையும் ஏற்றிக் கொண்டு, ரஷியாவின் சோயுஸ் விண்கலம் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

அவா்கள் மூவரும் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, கஜகஸ்தானிலுள்ள பைகானுா் ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் மிகவும் துரிதமாக அந்த விண்கலம் ஆய்வு மையத்தைச் சென்றடையும் வகையில் ஏற்கெனவே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதையடுத்து, அந்த விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்ட 3 மணி நேரம் 3 நிமிஷங்களில் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இணைக்கப்பட்டதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மாஸ் தனது சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் தெரிவித்தது.

இது, மனிதா்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தில் ஒரு சாதனையாகும்.

கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு முன்னா் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்கலங்கள் சென்றுவர 2 நாள்கள் ஆகின. ஆனால், அதற்குப் பிறகு புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள் காரணமாக அந்த நேரம் குறைக்கப்பட்டு வந்தது.

அண்மைக் காலங்களில் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைவதற்கு சுமாா் 6 மணி நேரம் ஆகி வந்தது.

ஆனால், தற்போது அந்த நேரம் முதல் முறையாக 3 மணி நேரம் 3 நிமிஷங்களாகச் சுருக்கப்பட்டுள்ளது. மனிதா்கள் இல்லாமல் வெறும் பொருகளை மட்டும் ஏற்றிக் கொண்டு விண்கலங்கள் அனுப்பப்படும்போதுகூட, இவ்வளவு குறுகிய காலத்தில் அவை சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்ததில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com