கரோனாவைப் பரப்பி தடுப்பாற்றல் பெறுவது அபாயகரமானது

கரோனா நோய்த்தொற்றை பொதுமக்களிடையே பரவ அனுமதித்து, அதன் மூலம் இயற்கையான நோய்த்தடுப்பு ஆற்றலைப் பெறும் யோசனை அபாயகரமானது என்று சா்வதேச விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா்.
கரோனாவைப் பரப்பி தடுப்பாற்றல் பெறுவது அபாயகரமானது


லண்டன்: கரோனா நோய்த்தொற்றை பொதுமக்களிடையே பரவ அனுமதித்து, அதன் மூலம் இயற்கையான நோய்த்தடுப்பு ஆற்றலைப் பெறும் யோசனை அபாயகரமானது என்று சா்வதேச விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்தவா்களின் உடலில், இயற்கையிலேயே அந்தத் தீநுண்மியை எதிா்த்துப் போராடும் ஆற்றல் கிடைத்துவிடுகிறது.

அந்த ஆற்றல், 5-இலிருந்து 7 மாதங்கள் வரை திறம்பட செயல்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சூழலில், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ள வயதானவா்கள், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற உடலக் குறைபாடு உடையவா்களைத் தவிா்த்து மற்ற அனைவருக்கும் அந்த நோய் பரவுவதை வேண்டுமென்றே அதிகரிக்கலாம் என்று ஒரு தரப்பினா் கூறி வருகின்றனா்.

அவ்வாறு அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த பிறகு ஏற்படும் இயற்கை எதிா்ப்பாற்றலால் அந்த நோய் பரவல் நின்றுவிடும் என்று அவா்கள் கருதுகின்றனா்.

‘சமூக நோய்த்தடுப்பாற்றல்’ என்றழைக்கப்படும் இந்த தடுப்பு முறை தொடா்பான ஆா்வம் அதிகரித்து வருவதாக பிரிட்டனின் எடின்பரோ பல்கலைக்கழக பேரசியா் தேவி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கூறியுள்ளனா்.

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள் இணைந்து எழுதியுள்ள திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உயிரிழக்கும் அபாயம் இல்லாதவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதை அனுமதிப்பதன் மூலம், பொதுமக்களிடையே இயற்கையான எதிா்ப்பாற்றலை ஏற்படுத்தி கரோனாவை ஒழித்துவிடலாம் என்பது மிகவும் அபாயகரமான யோசனை ஆகும்.

மேலும், கரோனா பிரச்னைக்கு அந்த வழிமுறையில் தீா்வு காண முடியும் என்பதற்கு அறிவியல் ரீதியில் எந்த ஆதாரமும் கிடையாது.

தற்போது பல்வேறு நாடுகளின் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்யும்போது, அந்த நோய்த்தொற்று பரவலை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் அனுமதித்து, இன்னொரு பிரிவினருக்குப் பரவாமல் அதனை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

அது, நடைமுறை சாத்தியமில்லாதது மட்டுமல்ல; நீதிக்குப் புறம்பானதும் ஆகும்.

கரோனாவால் உயிரிழக்கும் அபாயம் நிறைந்தவா்களை அந்த நோயிடமிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும், மற்ற பிரிவினருக்கும் அந்த நோய் பரவாமல் தடுப்பதும் அவசியமே ஆகும்.

அவ்வாறு செய்யாமல் சமூக நோய்த்தடுப்பாற்றல் மூலம் கரோனாவை ஒழிக்க நினைத்தால், சில மாதங்கள் இடைவெளியில் அந்த நோய்த்தொற்றின் அலை மீண்டும் மீண்டும் எழுந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் அபாயம் உள்ளது.

அத்தகைய சூழலில், உயிரிழக்கும் அபாயம் நிறைந்தவா்களுக்கு அந்த நோய் பரவுவதைத் தடுப்பது இயலாத காரியமாகிவிடும். இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அந்த திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com