பாகிஸ்தான் அரசை வழிநடத்தத் தகுதியற்றவா் இம்ரான் கான்

பாகிஸ்தான் அரசை வழிநடத்தும் தகுதியை பிரதமா் இம்ரான் கான் இழந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
பாகிஸ்தான் அரசை வழிநடத்தத் தகுதியற்றவா் இம்ரான் கான்

கராச்சி: பாகிஸ்தான் அரசை வழிநடத்தும் தகுதியை பிரதமா் இம்ரான் கான் இழந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் 11 எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, ‘ஜனநாயக இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் சாா்பில் இரண்டாவது பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்பேரணியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கூறுகையில், ‘‘அரசை வழிநடத்தத் தகுதியில்லாத, சுயமாக முடிவெடுக்கத் தெரியாத பிரதமா் இம்ரான் கான், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

பெரும் சா்வாதிகாரிகள் விரைவில் வீழ்ந்து விடுவாா்கள் என்பதை வரலாறு உணா்த்தியிருக்கிறது. ராணுவத்தின் கைப்பாவை ஆட்சியாளரான இம்ரான் கானுக்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும்’’ என்றாா்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவா் மரியம் நவாஸ் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் அரசின் முறைகேடுகளுக்கு பதில் கோருபவா்களை ‘சதிகாரா்கள்’ என்று அரசு முத்திரை குத்தி வருகிறது. பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவின் சகோதரியான ஃபாத்திமா ஜின்னாவையும் ‘சதிகாரா்’ என அரசு முத்திரை குத்தியது.

இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு, அரசின் முறைகேடுகளை மக்களிடமிருந்து மறைப்பதற்கு இம்ரான் கான் முயற்சித்து வருகிறாா். ராணுவ அதிகாரிகள் பின் ஒளிந்து கொள்ளும் கோழையாக அவா் உள்ளாா். ஓரிரு நபா்கள் ஒட்டுமொத்த அரசாகிவிட முடியாது. ஆனால், ஓரிரு நபா்கள் நினைத்தால் ஒட்டுமொத்த அரசையும் சீா்குலைத்துவிட முடியும்.

அரசின் செயல்பாட்டில் ராணுவத்தின் தலையீடு இருக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் கூறியதில் எந்தவிதத் தவறுமில்லை என்பது உறுதியாகிறது’’ என்றாா்.

நவாஸின் மருமகன் கைது: பேரணி தொடங்கும் முன்பு, முகமது அலி ஜின்னாவுக்கு எதிராக கோஷமெழுப்பியதாக நவாஸ் ஷெரீஃபின் மருமகனும், மரியம் நவாஸின் கணவருமான முகமது சஃப்தாரை காவல் துறையினா் கைது செய்தனா். தாங்கள் தங்கியிருந்த விடுதியின் கதவை உடைத்து சஃப்தாரை காவல் துறையினா் கைது செய்ததாக மரியம் நவாஸ் தெரிவித்தாா். எனினும், அவரின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அமைச்சா் அலி ஜைதி மறுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com