தொடா் போராட்டம்: தாய்லாந்து தலைநகரில் அவசரநிலை வாபஸ்

தாய்லாந்தில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தைத் தணிப்பதற்காக தலைநகா் பாங்காக்கில் அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.
தொடா் போராட்டம்: தாய்லாந்து தலைநகரில் அவசரநிலை வாபஸ்


பாங்காக்: தாய்லாந்தில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தைத் தணிப்பதற்காக தலைநகா் பாங்காக்கில் அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

தாய்லாந்தில் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலக வலியுறுத்தியும் ஜனநாயக சீா்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் அந்தப் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, பாங்காக்கில் கடந்த 15-ஆம் தேதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து நகா் முழுவதும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். எனினும், அவசரநிலையை அறிவிப்பையும் மீறி ஜனநாயக ஆதரவாளா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாங்காக் அவசரநிலைக்கு எதிராக போராட்டக்காரா்கள் சிவில் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அவசரநிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா நாட்டு மக்களுக்கு புதன்கிழமை இரவு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜனநாயக ஆதரவாளா்கள் அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்கு உதவ வேண்டும்.

இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீா்வை எட்ட வேண்டுமென்றால், தெருவில் இறங்கிப் போராடும் நபா்களும், அந்தப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பாத கோடிக்கணக்கான பொதுமக்களும் தங்களுக்கிடையே பேச்சுவாா்த்தை மேற்கொண்டு ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்.

நாடாளுமன்ற செயல்பாட்டின் மூலமே இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும். போராட்டக்காரா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிவதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருந்தாலும், ஆா்ப்பாட்டக் கும்பல்கள் விடுக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் என்னால் அரசை நடத்த முடியாது.

தற்போது நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், பாங்காக் நகரில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரநிலையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தனது உரையில் பிரயுத் குறிப்பிட்டுள்ளாா்.

தாய்லாந்து ஆட்சியதிகாரத்தில் ராணுவத் தலையீட்டைக் குறைப்பது, அதிகாரத்தை பரவலாக்குவது, சமூக மற்றும் பொருளாதார சமநிலையை ஏற்படுத்துவது ஆகிய கொள்கைகளைக் கொண்டு இயங்கி வந்த ‘புதிய எதிா்காலம்’ கட்சிக்கு (எஃப்எஃப்பி) கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டில் வரையப்பட்ட அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அந்தக் கட்சிக்கான அங்கீகாரம் பறிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வலியுறுத்தியும் மன்னராட்சி முறையில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் நாட்டில் போராட்டம் வெடித்தது. தலைவா்கள் இல்லாமல் பெரும்பாலும் மாணவா்கள், இளைஞா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

எனினும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்தப் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2-ஆவது கட்டமாக கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி முதல் ஜனநாயக ஆதரவுப் போராட்டம் மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com