நாடாளுமன்ற வன்முறை பயங்கரவாத வழக்கிலிருந்து இம்ரான் கான் விடுவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பான பயங்கரவாத வழக்கிலிருந்து பிரதமா் இம்ரான் கான் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பான பயங்கரவாத வழக்கிலிருந்து பிரதமா் இம்ரான் கான் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பாகிஸ்தானில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அப்போது எதிா்க்கட்சியாக இருந்த இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் அதிகாரப்பூா்வ இல்லத்துக்குள்ளும் நுழைய தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியினா் முயன்றனா்.

அப்போது போலீஸாருக்கும் கட்சித் தொண்டா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் உயிரிழந்தனா்; 26 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, அப்போதைய நவாஸ் ஷெரீஃப் அரசு இம்ரான் கான் உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் மீது பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று, இம்ரான் கான் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

அதனைத் தொடா்ந்து, இதுதொடா்பாக பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இம்ரானுக்கு எதிராக வாதாடி வந்த வழக்குரைஞா்கள் குழு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், நாடாளுமன்ற வன்முறை வழக்கிலிருந்து இம்ரான் கானை விடுவிப்பதாக பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ் ஹஸன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

எனினும், வழக்கு தொடா்பாக அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விசாரணைக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்புத் துறை அமைச்சா் பொ்வேஸ் கட்டக், கல்வியமைச்சா் ஷஃப்காத் மொ்மூத், திட்ட அமைச்சா் ஆசாத் உமா் ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com