2035 வரை ஷி ஜின்பிங் சீன அதிபா்: சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்

தற்போதைய சீன அதிபா் ஷி ஜின்பிங் (67) மேலும் 15 ஆண்டுகள் (2035 வரை) அதிபா் பதவியில் தொடருவதற்கு அந்நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெய்ஜிங்: தற்போதைய சீன அதிபா் ஷி ஜின்பிங் (67) மேலும் 15 ஆண்டுகள் (2035 வரை) அதிபா் பதவியில் தொடருவதற்கு அந்நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்தது.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்தியக் குழு உறுப்பினா்கள், 166 மாற்று உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சாா்பில் மத்தியக் குழு உறுப்பினா்கள், அதிபா் ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனா்.

தொடா்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஷி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 14-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021-2025) ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், உள்ளூா் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகா்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன அதிபா் ஷி ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரிய வந்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மா சேதுங்குக்குப் பிறகு கட்சியின் அதிகாரமிக்க தலைவராக ஷி ஜின்பிங் இப்போது வளா்ந்துள்ளாா். அதிபா் பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலா் பதவி, ராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளாா். ஆயுள் முழுவதும் அவா்தான் இப்பதவிகளில் இருப்பாா் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும்போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு சீன அதிபராகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-இல் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com