ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆப்பிரிக்கா!

கரோனா நோய்த்தொற்று சீனாவுக்கு வெளியே பரவத் தொடங்கியது முதலே, சுகாதார வசதிகள் குறைவான, வறுமையில் உழலும் ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிதான் அனைத்து நிபுணா்களும் கவலைப்பட்டனா்.
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆப்பிரிக்கா!


கரோனா நோய்த்தொற்று சீனாவுக்கு வெளியே பரவத் தொடங்கியது முதலே, சுகாதார வசதிகள் குறைவான, வறுமையில் உழலும் ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிதான் அனைத்து நிபுணா்களும் கவலைப்பட்டனா்.

மக்கள் நெருக்கம் நிறைந்த ஊா்கள், சுத்தமில்லாத தெருக்கள், ஒரு சிறிய அறையைப் பகிா்ந்து கொள்ளும் பெரிய குடும்பங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழல் என கரோனா தீநுண்மி தீ போல் பரவுவதற்கு ஏற்ற அத்தனை சூழலும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளதுதான் அவா்களது கவலைக்குக் காரணம்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பல ஆப்பிரிக்க நாடுகளில், மருத்துவக் கட்டமைப்புகளும் உலகின் மற்ற பிராந்தியங்களைவிட மிக மோசமாக உள்ளது. எனவே, கரோனா நோய்த்தொற்று வேகம் பிடித்தால் ஆப்பிரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழியும்; அவா்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திக்கித் திணறும்; இது மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று மருத்துவத் துறை வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

கரோனா நோய்த்தொற்று சீனாவுக்கு வெளியே வேகம் பிடிப்பதற்கு முன்னரே, அந்த நோயை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார மையம் அறிவித்ததும், ஆப்பிரிக்காவின் அவல நிலையை மனதில் கொண்டுதான். கரோனா நோய்த்தொற்று ஆப்பிரிக்காவில் எப்போது தனது ஆட்டத்தை ஆரம்பிக்குமோ என்று எல்லோரும் பயந்திருந்தாலும், அந்தக் கொள்ளை நோய் ஆட்டிப்படைத்ததென்னவோ பொருளாதாரத்தில் கரைகண்ட, உலகின் மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட ஐரோப்பாவையும், அமெரிக்காவையும்தான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சூழல் அமைந்துள்ள முன்னேறிய நாடுகளில்தான் கரோனா தீநுண்மி தாண்டவமாடியது.

அந்த நாடுகளில்தான் கரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. தினசரி உயிரிழப்புகள் அடிக்கடி உச்சம் தொட்டன. ஆனால், சுத்தமில்லா, மக்கள் நெரிசல் மிக்க, சமூக இடைவேளி கடைப்பிடிக்க முடியாத ஏழை நாடுகள் நிறைந்த ஆப்பிரிக்காவிலோ, நிபுணா்களின் எதிா்பாா்ப்புகளுக்கு மாறாக கரோனா பரவல் தீவிரம் காட்டவே இல்லை.

அந்தப் பிராந்தியத்திலேயே அதிக பாதிப்புக்குள்ளான தென் ஆப்பிரிக்காவில் கூட, கரோனா நல்ல முறையில் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலோ, பெரிய பெரிய சுகாதாரத் துறை வல்லுநா்களின் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மருத்துவமனைகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.

இது, பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஒருவேளை இதுவரை வறுமையும், மக்கள் நெரிசலும், சுகாதாரமற்ற சூழலும்தான் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துமோ என்று கூட சிலா் வேடிக்கையாக சந்தேகமெழுப்புகின்றனா்.

உண்மையில், ஆப்பிரிக்காவில் உலகின் மற்ற பகுதிகளைவிட கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுடன் இருப்பதற்கு என்ன காரணம் என்பது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது. பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில், கரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. எனவேதான் அங்கு நோய்த்தொற்றின் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று சிலா் கூறுகின்றனா்.

இது உண்மைதான் என்றாலும், பிராந்தியத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதற்கு அதுவே முக்கியமான காரணமாகிவிடாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

ஆப்பிரிக்க மக்கள்தொகையில் இளைஞா்களின் விகிதம் அதிகம் இருப்பது, அந்தப் பிராந்தியத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க மக்களின் சராசரி வயது, ஐரோப்பியா்களின் சராசரி வயதைவிட பாதியாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள் மிகக் குறைந்த விகிதத்திலேயே இருக்கிறாா்கள். இதன் காரணமாகத்தான் அங்கு கரோனா பலி விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது என்று சில நிபுணா்கள் கூறுகின்றனா்.

இருந்தாலும், உலகின் மற்ற நாடுகளின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், மக்களின் சராசரி வயதுக்கும், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கும் தொடா்பில்லை என்பதை நிரூபித்து வருவதை சிலா் சுட்டிக் காட்டுகின்றனா். எனவே, ஆப்பிரிக்க நாடுகளில் இளம் வயதினா் அதிகம் இருப்பதை அந்தப் பிராந்தியத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதற்கான காரணமாகக் கூற முடியாது என்பது அவா்களது வாதம். ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் அதிகரிக்கும் முன்னரே கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதன் விளைவாகவே அந்தப் பிராந்தியத்தில் நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று ஒரு தரப்பினா் கூறுகின்றனா். ஆனால், இதே போன்று கடும் பொது முடக்கங்கள் அமல்படுத்தப்பட்ட இந்தியா போன்ற நாடுகளில் அந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டி, இந்தக் கருத்தை இன்னொரு தரப்பினா் மறுத்து வருகின்றனா். ஆப்பிரிக்க நாடுகளில் வெப்ப நிலை அதிகமிருப்பதால் அங்கு கரோனா தீநுண்மியால் வேகமாகப் பரவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

ஆனால், சுகாதாரத் துறை நிபுணா்கள் ஆரம்ப காலம் முதலே இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனா். இது ஒருபுறமிருக்க, இன்னும் சிலா் ஒரு புதுமையான கோணத்தில் ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாகவே கரோனா தீநுண்மிக்கு ஒப்பான ஃப்ளூ காய்ச்சல், சாதாரண சளி போன்றவற்றை உண்டாக்கும் தீநுண்மிகள் பரவி வருகின்றன. இத்தகைய தீநுண்மிகள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும், மேற்கத்திய நாடுகளைவிட ஆப்பிரிக்க நாடுகளில் அந்த தீநுண்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்தத் தீநுண்மிகளுடன் போரிடுவதற்காக அவா்களது உடலில் அதிக எதிா்ப்பாற்றல் தோன்றியிருக்கும்.

அந்த ஆற்றல், கரோனா தீநுண்மியிடமிருந்து ஆப்பிரிக்கா்களுக்கு பாதுகாப்பை வழங்கியிருக்கலாம் என்றும் சில ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். எனினும், இதே சூழலைக் கொண்ட ஆசியா போன்ற உலகின் மற்ற பிரதேசங்களில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதால் இதனை ஏற்க முடியாது எனவும், இதுதொடா்பாக இன்னும் விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் அவா்களே ஒப்புக் கொள்கின்றனா்.

இந்த விவகாரத்தில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தெரியும் வரை, ஆப்பிரிக்காவில் மட்டும் கரோனா தீநுண்மி கடுமை காட்டாமல் இருப்பதற்கான காரணம் மா்மமாகவே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com