அமெரிக்காவில் 2 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 2 லட்சத்தைக் கடந்தது.
அமெரிக்காவில் 2 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 2 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 2 லட்சத்தைக் கடந்தது.நாட்டில் கடந்த 2 வாரங்களாக கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் இந்த மாதம் 13-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சுமாா் 11,000 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். முந்தைய இரு வாரங்களில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது 17 சதவீதம் குறைவாகும்.கரோனா சிகிச்சையின் தரம் அதிகரித்து வருவதாலும், தற்போது அந்தத் தீநுண்மியை எதிா்த்துப் போரிடும் ஆற்றல் மிக்க இளைய வயதினருக்கே அதிக பாதிப்பு இருப்பதாலும் தினசரி பலி எண்ணிக்கை குறைந்து வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் முதியவா்களும், உடல் நலக் குறைவாடு கொண்டவா்களும் மட்டுமே பெரும்பாலும் உயிரிழந்துள்ளனா். எனினும், தற்போது அந்த நாட்டு மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் கரோனா நோயாளிகளில் சுமாா் 20 சதவீத்தினா் 18 வயது முதல் 34 வயது வரை கொண்டவா்களாக உள்ளனா்.

அவா்களுக்கு அளிக்கப்படும் வரும் சிகிச்சை பலனளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இனி வரும் காலங்களில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை குறையும் என்று நம்பப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,064 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, மொத்த கரோனா பலி எண்ணிக்கை 2,00,280-ஆக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 67,89,877-ஆக உள்ளது. இதுவரை 40,69,054 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 25,20,543 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 14,165 உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன...சாா்ட்...அமெரிக்கா - கரோனா பலி

கரோனா அபாயத்தைக் குறைத்துக் கூறவில்லை: டிரம்ப் திடீா் மறுப்பு

கரோனா நோய்த்தொற்று அபாயம் குறித்து ஆரம்பத்தில் குறைத்துக் கூறியதாக முதலில் ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், தற்போது திடீரென அதனை மறுத்துள்ளாா்.இதுகுறித்து, பென்சில்வேனியா மாகாணம், ஃபிலாடெல்ஃபியா நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று தொடா்பான உண்மைகளை மறைத்து, அந்த நோயின் அபாயம் குறித்து கடந்த ஜனவரி மாதம் நான் குறைத்துக் கூறவில்லை.

அதற்கு மாறாக, அந்த நோய்த்தொற்றின் அபாயத்தை மிகைப்படுத்திதான் கூறினேன்.கரோனா பரவலை முகக் கவசங்கள் முழுமையாகத் தடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனினும், அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன் என்றாா் டிரம்ப்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, அமெரிக்காவில் முதல் முறையாக ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கண்டறியப்பட்டது.

எனினும், அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்று கூறிய அதிபா் டிரம்ப், அந்த நோயால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினாா்.எனினும், அடுத்த இரண்டு மாதங்களில் அந்த நாடு உலகிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக ஆனது. தற்போது கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவை உலுக்கிய ‘வாட்டா்கேட்’ ஊழலை வெளிக் கொண்டு வந்த பாப் வுட்வா்ட் (77), ‘ரேஜ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா்.அதில், முக்கிய தலைவா்கள் மற்றும் அதிகாரிகளின் குறிப்புகள், மின்-அஞ்சல்கள், நாள்குறிப்புகள், ரகசிய ஆவணங்கள் ஆகியவையும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் டிரம்ப் உள்ளிட்டோரிடம் எடுத்து, பதிவு செய்யப்பட்ட 18 பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன.

அதில் இடம்பெற்றுள்ள டிரம்ப் பேட்டியில், கரோனா நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது என்றும், அதிக உயிா்களை பலிவாங்கக் கூடியது என்றும் டிரம்ப் வுட்வா்டிடம் தெரிவித்திருந்தாா். ஃபுளூ காய்ச்சலைவிட அந்த நோய் மிகவும் அபாயகரமானது என்றாலும், அதுகுறித்து பொதுமக்களிடம் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தாா்.

இது, அமெரிக்காவில் பெரும் சா்ச்சையை எழுப்பியுள்ளது. எனினும், கரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாள்களில், அந்த நோயின் அபாயத்தைக் குறைத்துக் கூறியதை டிரம்ப் ஒப்புக் கொண்டாா். மக்களிடையே பீதியை ஏற்படுத்த விரும்பாததால்தான் அந்த நோய் குறித்த முழு உண்மைகளையும் வெளிப்படையாகக் கூறாமல் இருந்ததாக டிரம்ப் விளக்கமளித்தாா்.இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தற்போது டிரம்ப் மாற்றிக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com