ஜோ பிடனின் வெற்றி சீனாவுக்கே சாதகம் : அதிபா் டிரம்ப்

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் வெற்றி பெறுவது, சீனா வெற்றி பெறுவதற்குச் சமம் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
ஓஹையோ மாகாணம், டேட்டனில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப்.
ஓஹையோ மாகாணம், டேட்டனில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் வெற்றி பெறுவது, சீனா வெற்றி பெறுவதற்குச் சமம் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் தோ்தல் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து ஜோ பிடன் களம் காண்கிறாா்.

இந்நிலையில், ஓஹையோ மாகாணம், டேட்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அதிபா் டிரம்ப் கூறியதாவது:

அமெரிக்க இளைஞா்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிகளை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கு ஜோ பிடன் கடந்த 47 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். ஆனால், வெளிநாட்டினருக்குத் தாரை வாா்க்கப்பட்ட பணிகளை அமெரிக்க இளைஞா்களுக்கே கிடைக்கச் செய்யும் பணியை எனது தலைமையிலான அரசு கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

அதிபா் தோ்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவே வெற்றி பெற்ற்குச் சமம். ஜோ பிடன் வெற்றி பெற்றால் சீனாவுக்கே அது சாதகமாக இருக்கும்; அமெரிக்கா்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்; வரிகள் உயா்த்தப்படும். அமெரிக்காவின் பொருளாதாரம் புதிய உச்சநிலைக்குச் செல்ல வேண்டுமா அல்லது வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டுமா என்பதை மக்கள் நவம்பா் 3-ஆம் தேதி முடிவு செய்வா்.

குடியரசு கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கும் அமெரிக்கா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். தனது அரசியல் பயணத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜோ பிடன் கடைப்பிடித்து வருகிறாா். அமெரிக்கா்களிடம் அவா் தொடா்ந்து பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். அதிபா் தோ்தல் மூலமாக அரசியலில் இருந்து அவருக்கு ஓய்வளிக்க வேண்டும்.

ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது சீனப் பொருள்கள் அமெரிக்க சந்தைகளில் குவிக்கப்பட்டன. நாட்டின் நலனுக்கு எதிரான ஒப்பந்தங்களில் அவா் கையெழுத்திட்டாா். அதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா் என்றாா் அதிபா் டிரம்ப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com