பாகிஸ்தான்: முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராணுவ தளபதி, ஐஎஸ்ஐ தலைவர் ரகசிய ஆலோசனை

பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபயஸ் ஹமீது ஆகியோர் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர். 

பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபயஸ் ஹமீது ஆகியோர் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினர்.
 சில நாள்களில் அனைத்துக்கட்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் இம்ரான்கானுடன் உள்ள அரசியல் வேறுபாடுகளுக்காக ராணுவத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகளிடம் அவர்கள் கேட்டுக்கொண்டதாக பத்திரிகை செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
 பாஜ்வாவும், ஹமீதும் 15 அரசியல் கட்சித் தலைவர்களுடன் கடந்த 16ஆம் தேதி இந்தக் கூட்டத்தை நடத்தியதாகவும், அதில் முக்கிய எதிர்க்கட்சிகளான தேசிய பேரவையின் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் புட்டோ ஜர்தாரி பங்கற்றதாகவும் தி டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 இந்த ரகசிய கூட்டத்தையும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் உறுதிப்படுத்தினார். ரஷீத் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
 எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 26 அம்ச பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக, இனி வரும் தேர்தல்களில் ராணுவமோ அல்லது உளவு அமைப்புகளோ எவ்வித பங்கும் வகிக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
 மேலும், விரைவில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி மாநாட்டில் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் உணர்வுகளுக்கு அவர் செவிசாய்க்கத் தவறினால், இம்ரான் கானை ஆட்சியிலிருந்து அகற்ற நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க ஒரு குழுவும் உருவாக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com