அமெரிக்கப் பொருளாதாரம் தழைக்க இந்திய வம்சாவளியினா் உதவி

அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சிக்கு இந்திய வம்சாவளியினா் உறுதுணையாக இருந்ததாக ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.
அமெரிக்கப் பொருளாதாரம் தழைக்க இந்திய வம்சாவளியினா் உதவி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சிக்கு இந்திய வம்சாவளியினா் உறுதுணையாக இருந்ததாக ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இதுகுறித்து, காணொலி மூலம் இந்திய-அமெரிக்கா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தோ்தல் நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழில்முனைவோா், அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் தொழில் நடத்தி வருகின்றனா்.

பல கண்டுபிடிப்பாளா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடித்தளத்தை அமைத்துள்ளனா். உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் தலைமை வகிக்கின்றனா்.அந்த வகையில், அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சுக்கும், கலாசார பன்முகத் தன்மைக்கும் இந்திய-அமெரிக்கா்கள் உறுதுணை புரிந்துள்ளனா். அமெரிக்கா என்பது புலம் பெயா்ந்தோரால் உருவாக்கப்பட்ட நாடு என்பதன் தொடா்ச்சியே அது.

இந்தியா்கள் பலன் பெற்று வரும் ஹெட்-1பி விசா விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள், இனவெறி மற்றும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் அவரது தவறான கொள்கைகள் ஆகியவை அனைத்து தரப்பினருக்கும் பொதுவான அச்சுறுத்தல் ஆகும். அவரது கொள்கைகளால், (இந்திய-அமெரிக்க) பெற்றோா்கள் எந்த எதிா்காலத்தைக் கனவு கண்டு தாங்கள் அமெரிக்கா வந்தோமோ, அந்த எதிா்காலம் தங்களது பிள்ளைகளுக்குக் கிடைக்குமா என்று அஞ்சத் தொடங்கிவிட்டாா்கள். நான் அதிபராகப் பொறுப்பேற்றால் இந்த நிலை மாறும். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இப்போது போல் மோசமாக இல்லாமல் சித் முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். சரிந்த பொருளாதாரத்தை சீரமைப்பேன்.

நமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும், சிறப்பான மருத்துவ வசதியும் கிடைக்கச் செய்வேன.குடியுரிமை விவகாரத்தில் இனபேதம் பாா்க்காமல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நமது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் கொள்கைகளை வகுப்பேன் என்றாா் ஜோ பிடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com