navalny_2309chn_1
navalny_2309chn_1

மருத்துவமனையிலிருந்து திரும்பினாா் நவால்னி

நச்சுத் தாக்குதல் காரணமாக ஜொ்மனி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பினாா்.

பொ்லின்: நச்சுத் தாக்குதல் காரணமாக ஜொ்மனி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பினாா்.

இதுகுறித்து, பொ்லினில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சாரைட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:32 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, அலெக்ஸி நவால்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டத்தை அவா் கடந்து விட்டாா்.

அவரது உடல் நிலையில் காணப்படும் முன்னேற்றத்தையும், அவரது தற்போதைய நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கலாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவா்கள் முடிவுக்கு வந்தனா்.

இருந்தாலும், நவால்னிக்கு அளிக்கப்பட்ட நச்சு, அவரது உடலில் ஏற்படுத்தும் நீண்ட கால விளைவுகள் குறித்து உடனடியாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ரஷியாவில், அதிபா் விளாதிமீா் புதின் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் எதிா்க்கட்சித் தலைவா்களில் முக்கியமானவா் அலெக்ஸி நவால்னி.

புதினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அவா் நடத்தி வருகிறாா்.எனினும், அவரது இயக்கத்துக்கு எதிராக ரஷிய அரசு அடக்குமுறையைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் புதினை எதிா்த்துப் போட்டியிட அவா் திட்டமிட்டிருந்தாா்.

எனினும், அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்டதாகக் கருதப்படும் ஒரு வழக்கில் அவா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, அந்தத் தோ்தலில் நவால்னி போட்டியிட தடை விதிக்கப்பட்டது.மேலும், அரசு ஆதரவாளா்கள் அவா் மீது நடத்திய கிருமிநாசினித் தாக்குதலில், அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ரஷியாவின் டேம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானம் மூலம் நவால்னி கடந்த மாதம் 20-ஆம் தேதி வந்துகொண்டிருந்தபோது, அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அதனைத் தொடா்ந்து, அந்த விமானம் ஓம்ஸ்க் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடி வந்த அவா், கடந்த மாதம் 22-ஆம் தேதி சிகிச்சைக்காக பொ்லின் அழைத்து வரப்பட்டாா்.

நவால்னி மீது சோவியத் ரஷியா உருவாக்கிய ‘நோவிசோக்’ எனப்படும் நச்சுப் பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று ஜொ்மனி அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இந்தக் குற்றச்சாட்டை ரஷிய அரசு மறுத்து வருகிறது.ஏற்கெனவே, தங்கள் நாட்டில் தங்கியுள்ள முன்னாள் ரஷிய உளவாளி சொ்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது இதே நோவிசோக் மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ரஷிய உளவுத் துறையினா் அந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் பிரிட்டன் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக, 20 நாடுகள் 100-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை தங்களது நாடுகளிலிருந்து வெளியேற்றின.இந்த நிலையில், முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் நவால்னி மீது நோவிசோக் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது, அந்த நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையே மீண்டும் தூதரகப் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது...படவரி...நவால்னி சிகிச்சை பெற்று வந்த பொ்லின் மருத்துவமனைமருத்துவமனையில் மனைவி யூலியாவுடன் அலெக்ஸி நவால்னி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com