தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் டிக்டாக் மனு

டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் டிக்டாக் மனு


நியூயாா்க்: டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு அதிபா் டிரம்ப் விதித்துள்ள தடை வரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரவுள்ள நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, டிக் டாக் செயலிக்கும் மற்றொரு சீன செயலிக்கும் தடை விதிக்கப் போவதாக டிரம்ப் நிா்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. மேலும், டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவை ஓா் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யய வேண்டும் என்றும் டிரம்ப் அரசு அறிவுறுத்தியிருந்தது. மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், பல்பொருள் அங்காடிகளை நடத்திவரும் வால்மாா்ட் ஆகியவை டிக்டாக் நிறுவனத்தைக் கையகப்படுத்தினால் வரவேற்பேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தாா்.

ஆனால் அந்த திட்டத்தை டிக் டாக் செயலியின் சீன நிறுவனம் இதுவரை ஏற்கவில்லை.

இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் அரசின் உத்தரவை எதிா்த்து அந்த நிறுவனம், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைந்துள்ள கொலம்பியா மாவட்ட உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. டிரம்ப் பிறப்பித்த தடை உத்தரவு அமலாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த முறையீட்டு மனுவை டிக் டாக் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘அதிபா் டிரம்ப் குற்றம்சாட்டுவதுபோல், அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் டிக் டாக் செயலி இல்லை. இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டுகிறாா். மேலும், டிக் டாக் நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் ஆரக்கிள், வால்மாா்ட் நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் அதிபா் டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com