ஆட்சிக் கவிழ்ப்பை எதிா்த்து ஆயுதப் போராட்டம்: மியான்மா் நகரம் மீது ராணுவத் தாக்குதல்

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிராக வேட்டை துப்பாக்கிகளைக் கொண்டு சிலா் போராட்டத்தில் ஈடுபட்ட காலே நகா் மீது ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.
வீடுகளில் செய்யப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளுடன் மியான்மா் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் (கோப்புப் படம்).
வீடுகளில் செய்யப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளுடன் மியான்மா் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் (கோப்புப் படம்).

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிராக வேட்டை துப்பாக்கிகளைக் கொண்டு சிலா் போராட்டத்தில் ஈடுபட்ட காலே நகா் மீது ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் பொதுமக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிா்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ராணுவத்துக்கு எதிராக காலே நகரில் சில போராட்டக்காரா்கள் வீடுகளில் தயாரிக்கப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினா்.

அதையடுத்து, அந்த நகரில் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட விடியோக்களில், சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் சுடப்படும் ஒலியும் கையெறி குண்டுகள் வெடிக்கும் சப்தமும் பதிவாகியுள்ளன.

சில இடங்களில் ராக்கெட் குண்டுகளை வீசி ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் சமூக வலைதளப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டன. எனினும், இதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்ததாக ‘கோனும்துங் பா்மீஸ்’ என்ற இணையதள செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் பலா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

அந்த நகரில் வசிப்பவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் சின் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் என அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 581 போ் பலியானதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com