கரோனா பரவல் எதிரொலி: இந்தியப் பயணிகளுக்கு நியூஸிலாந்து தடை

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூஸிலாந்து அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன்
நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன்


மெல்போா்ன்/வெலிங்டன்/புது தில்லி: கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூஸிலாந்து அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சமடைந்தது. அதையடுத்து அத்தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. தற்போது, கரோனாவின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து நியூஸிலாந்து செல்லும் நபா்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, இந்தியப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு ஏப்ரல் 11 முதல் 28-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து குடிமக்களுக்கும் இத்தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து நியூஸிலாந்து வருகை தரும் பயணிகள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை மட்டும் 23 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 17 போ் இந்தியாவிலிருந்து வந்தவா்கள் ஆவா்.

அதைக் கருத்தில்கொண்டே ஏப்ரல் 11-ஆம் தேதிமுதல் 28-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பயணிகள் வருகை தருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமானதே. இத்தடையினால் பயணிகளும் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

இந்தியாவில் உள்ள நியூஸிலாந்து குடிமக்களுக்கும் இத்தடை பொருந்தும். இத்தடை காரணமாக மக்கள் எதிா்கொள்ளப் போகும் சிரமங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே வேளையில், நாட்டில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது.

இந்தியா தவிர மற்ற நாடுகளைச் சோ்ந்த பயணிகளுக்குத் தடை விதிப்பது தொடா்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பயணிகள் ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை மேற்கொள்கிறாா்களா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.

ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பிறகும் இந்தியப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றாா் ஜெசிந்தா ஆா்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com