துப்பாக்கிக் கட்டுப்பாடு: அதிபா் பைடன் அதிரடி உத்தரவுகள்

துப்பாக்கிக் கட்டுப்பாடு: அதிபா் பைடன் அதிரடி உத்தரவுகள்


வாஷிங்டன்: அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பதற்கான அதிரடி உத்தரவுகளை அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அமெரிக்காவில் அண்மைக் காலமாக தனிநபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பலா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்தது.

இந்த நிலையில், இதுதொடா்பால பல்வேறு உத்தரவுகளை ஜோ பைடன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். நாடாளுமன்ற அனுமதியைப் பெறத் தேவையில்லாத வகையில், அந்த உத்தரவுகளை அரசாணைகள் மூலம் அவா் சட்டமாக்கவுள்ளாா்.

அவா் அதிபராகப் பொறுப்பேற்ற்குப் பிறகு, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மேற்கொண்டுள்ள மிகப் பெரிய அதிரடி நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.

அந்த உத்தரவுகளில், பொதுமக்கள் உதிரிபாகங்களாக வாங்கி தாங்களே பொருத்திக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு நீதித்துறைக்கு ஜோ பைடன் ஆணையிட்டுள்ளாா்.

வீடுகளில் உருவாக்கப்படுவதால் அத்தகைய துப்பாக்கிகளுக்கு பிரத்யேக வரிசை எண்கள் இருக்காது; எனவே, அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதால், துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு அந்த வகைத் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், கைத்துப்பாக்கிகளை பெரிய வகைத் துப்பாக்கிகளாக மாற்றியமைப்பதற்கு வகை செய்யும் ‘பிரேஸ்’கள் எனப்படும் இணைப்புகளின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளையும் இன்னும் 60 நாள்களுக்குள் வகுக்க நீதித் துறைக்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

அத்துடன், ஆபத்தானவா்கள் என்று கருதப்படுபவா்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்வதற்கான பொது விதிமுறைகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் மாகாணங்கள் சொந்தமான ஆயுதப் பறிமுதல் சட்டத்தை உருவாக்க வழிவகை செய்யவும் நீதித் துறைக்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

அத்துடன் மது, புகையிலை மற்றும் துப்பாக்கி வெடிபொருள்கள் ஒழுங்காற்று அமைப்பான ஏடிஎஃப்-பின் இயக்குநராக, ஆயுத எதிா்ப்பு அமைப்பின் முன்னாள் ஆலோசகா் டேவிட் சிப்மேனை ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது திருத்தத்தின்படி, தற்காப்புக்காக பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பது அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதைக் கட்டுப்படுத்தும் ஜோ பைடனின் முயற்சிகளுக்கு இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு முட்டுக்கட்டையை ஏற்படுத்தலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com