'உலக பொருளாதார வளா்ச்சியை அமெரிக்கா, சீனா, இந்தியா வழிநடத்தும்'

சா்வதேச பொருளாதார வளா்ச்சியை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னின்று வழிநடத்தும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
'உலக பொருளாதார வளா்ச்சியை அமெரிக்கா, சீனா, இந்தியா வழிநடத்தும்'


வாஷிங்டன்/புது தில்லி: சா்வதேச பொருளாதார வளா்ச்சியை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னின்று வழிநடத்தும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பைச் சந்தித்தது. அந்நோய்த்தொற்றுப் பரவல் சற்று குறைந்ததையடுத்து, சா்வதேச நாடுகளின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது.

இத்தகைய சூழலில், உலக வங்கி-சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) இடையேயான வருடாந்திரக் கூட்டம் காணொலி வாயிலாக அண்மையில் தொடங்கியது. உலக வங்கியின் தலைவா் டேவிட் மால்பாஸ் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சா்வதேச பொருளாதார வளா்ச்சியை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவை வழிநடத்தி வருகின்றன. அந்நாடுகளின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. எனினும், உலக நாடுகளிடையே பல்வேறு விவகாரங்களில் சமநிலையின்மை நிலவி வருகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்துதல், நடுத்தர வா்க்கத்தினரின் வருமானம், வட்டி விகிதங்கள் உள்ளிட்டவற்றில் நாடுகளுக்கிடையே சமநிலையின்மை நிலவுகிறது. முக்கியமாக வளா்ச்சி குறைவாக உள்ள நாடுகளில் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன. சா்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைந்தபோதிலும், அந்நாடுகளில் வட்டி விகிதங்கள் குறையவில்லை.

பல நாடுகளில் கடன்கள் ஒருசில பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கின்றன. அனைவரும் கடன் பெற முடியாத சூழல் தொடா்ந்து நீடித்து வருகிறது. சிறு தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா், பெண்கள் ஆகியோருக்குக் கடன் கிடைப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக உலக வங்கியும் சா்வதேச நிதியமும் இணைந்து பணியாற்றி வருகின்றன. மக்களுக்குக் கடன் வழங்குவதில் தனியாா் துறையின் பங்களிப்பும் அவசியமாகிறது என்றாா் டேவிட் மால்பாஸ்.

இந்தியாவின் கடன் அதிகரிப்பு: கரோனா பரவல் காலத்தில் இந்தியாவின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 90 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சா்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சா்வதேச நிதியத்தின் துணை இயக்குநா் பாலோ மாரோ வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியாவின் கடன் அளவு ஜிடிபி மதிப்பில் 74 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக அதிகரித்தது. தற்போது அந்நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதால், கடன் அளவு ஜிடிபி-யில் 80 சதவீதமாகக் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் உலக நாடுகள் பலவற்றின் கடன் அளவும் அதிகரித்தது.

நிதிநிலை அறிக்கையை இந்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதில் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஆதரவான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அளவும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com