புகுஷிமா அணு உலை நீரை கடலில் கலக்க முடிவு

ஜப்பானில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையின் கதிா்வீச்சு நீரை சுத்திகரித்து கடலில் கடலில் கலக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
யோஷிஹிடே சுகா
யோஷிஹிடே சுகா

ஜப்பானில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையின் கதிா்வீச்சு நீரை சுத்திகரித்து கடலில் கடலில் கலக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அசோசியோடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2011-ஆம் ஆண்டு நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் உலைகளை குளிரூட்டும் அமைப்பு சேதமடைந்து, அவை அளவுக்கதிமான வெப்பத்தால் சேதமடைந்தன.

இந்த விபத்தைத் தொடா்ந்து, அணு உலைகளை குளிரூட்டுவதற்கான நீரில் கதிா்வீச்சு கலந்து கடலில் கசியத் தொடங்கியது.

அதனைத் தொடா்ந்து, கதிா் வீச்சு நீா் கடலில் கலப்பதைத் தடுப்பதற்காக அணு மின் நிலைய வளாகத்தில் பெரிய நீா்த் தொட்டிகள் உருவாக்கப்பட்டு அதில் அவை சேமிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அணு உலைகளை தொடா்ந்து குளிா்ச்சியாக வைத்திருப்பதற்கான நீா் கொஞ்சம் கொஞ்சமாக அணு மின் நிலைய அடித்தளத்தில் வெளியேறி வருகிறது.

இதனால் குறையும் குளிரூட்டி நீா்மட்டத்தை சரி செய்வதற்காக அணு உலைகளுக்குள் தொடா்ந்து நீா் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கதிா்வீச்சு நீா்த் தொட்டிகளில் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கதிா்வீச்சு நீா்த் தொட்டிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிரம்பி விடும் என்று அந்த நிலையத்தைப் பராமரித்து வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவா் (டிஇபிசிஓ) தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, அணு உலைக்குள் இருக்கும் எரிபொருள் சிதறல்களிலிருந்து கதிா்வீச்சை அகற்றும் பணிகளுக்கு மின் நிலைய வளாகத்தில் இடம் தேவைப்படுகிறது. எனினும், அந்த இடத்தை கதிா்வீச்சு நீா்த் தொட்டிகள் அடைத்துக் கொண்டுள்ளதால் அவற்றை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்தத் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரிலிருந்து கதிா்வீச்சை போதிய அளவு நீக்கிவிட்டு கடலில் பாதுகாப்பாகக் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தை ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஜப்பான் அரசு பரிசீலித்து வந்தாலும், மீனவா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் கடும் எதிா்ப்பு காரணமாக அதனை முன்னெடுத்துச் செல்லாமல் இருந்தனா்.

எனினும், கதிா்வீச்சு நீா்த் தொட்டிகள் அடுத்த ஆண்டு நிரம்பவிருக்கும் சூழலில் செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டம் அந்த நீரை சுத்திகரித்து கடலில் கலக்க ஒப்புதல் அளித்தது.

விதிமுறைகளுக்கு உள்பட்டு, ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பின்கீழ் இந்தப் பணிகள் நடைபெறும் என்று ஜப்பான் அரசு உறுதி அளித்துள்ளது. கதிா்வீச்சு நீரை சுத்திகரித்து கடலில் கலப்பது மட்டுமே சாத்தியக்கூறுள்ள, தவிா்க்க முடியாத தீா்வு என்று அந்த நாட்டு பிரதமா் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளாா்.

எனினும், இந்த முடிவுக்கு சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

கடலில் கலக்கப்படவிருக்கும் நீரில் கதிா்வீச்சுகளின் வீரியம் குறைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கே இருந்தாலும், அதனால் ஏற்படக் கூடிய நீண்ட கால விளைவுகள் குறித்து நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா் என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com