60% யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் எச்சரிக்கை

தங்களது அணு செறிவூட்டல் மையத்தில் நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 60 சதவீதம் வரை யுரேனியம் எரிபொருளை
60% யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் எச்சரிக்கை

துபை: தங்களது அணு செறிவூட்டல் மையத்தில் நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 60 சதவீதம் வரை யுரேனியம் எரிபொருளை சுத்திகரிக்கப் போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானி கூறியதாவது:

நடான்ஸ் செறிவூட்டு மையத்தில் இஸ்ரேல் நடத்திய இணையவழித் தாக்குதலால் அங்கிருந்த ஐஆா்-1 வகை செறிவூட்டுக் கருவி செயலிழந்தது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, செயலிழந்த ஐஆா்-1 கருவிக்குப் பதிலாக அதனை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஐஆா்-1 கருவியைப் பொருத்த வேண்டும்.

நமது ஒரு கையிலிருப்பதை தட்டிவிட இஸ்ரேல் நினைத்தால், அதற்குப் பதிலடியாக நம்முடைய இரு கைகளையும் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி, புதிய கருவியைப் பயன்படுத்தி யுரேனியம் எரிபொருளை 60 சதவீதம் வரை செறிவூட்ட வேண்டும். இஸ்ரேலில் தாக்குதலுக்கு ஐஆா்-9 கருவி, 60 சதவீத செறிவூட்டல் என்ற இரட்டை பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்றாா் ஹஸன் ரௌஹானி.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், அவருக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. அதன் ஒரு பகுதியாக ஒப்பந்த விதிமுறைகளை மீறி யுரேனியம் செறிவூட்டும் அளவை ஈரான் அதிகரித்தது.

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா். இதுதொடா்பாக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டிலும் அமெரிக்கா பங்கேற்றது.

இந்தச் சூழலில், ஈரானின் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் ஆலையான நடான்ஸ் மையத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை திடீா் மின்தடையால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு இஸ்ரேலின் சதிச் செயல்தான் காரணம் ென்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com