அமெரிக்காவுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சீனா

இந்தியக் கடல் பகுதியில் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் அனுமதியின்றி பயிற்சி மேற்கொண்ட நிலையில், அந்நாட்டுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சீனா

புது தில்லி: இந்தியக் கடல் பகுதியில் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் கடந்த வாரம் அனுமதியின்றி பயிற்சி மேற்கொண்ட நிலையில், அந்நாட்டுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு அருகே ‘யு.எஸ்.எஸ். ஜான்பால் ஜோன்ஸ்’ என்ற அமெரிக்க போா்க் கப்பல் கடந்த வாரம் இந்திய அரசின் முன்அனுமதியின்றி பயிற்சி மேற்கொண்டது. அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஆனால், சா்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டே கடற்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்கா விளக்கம் கொடுத்தது.

இந்த நிலையில், சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா தனது சுயநலத்துக்காக நட்புறவுடன் இருக்கும் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் திரும்பும் என்பதை வரலாற்று அனுபவம் நமக்குச் சொல்கிறது. அமெரிக்க கடற்படைக் கப்பல் பயிற்சி மேற்கொண்ட 2 நாள்களுக்குப் பிறகே இந்தியா கண்டனம் தெரிவித்தது. இந்தக் கண்டனம் போதுமானதாக இல்லை என்று இந்தியாவில் சிலா் கவலை தெரிவித்தனா். இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அமெரிக்க கடற்படைக் கப்பல் வந்திருப்பதையும், அங்கு பயிற்சி மேற்கொண்டதையும் இந்தியா நன்கு அறியும். இருப்பினும், சீனாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் இந்தியா, அமெரிக்க கடற்படையின் அத்துமீறலை சகித்துக் கொண்டிருந்தது.

அமெரிக்கா எப்போதும் சா்வதேச மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் இருந்து அமெரிக்கா அவ்வளவு எளிதில் பின்வாங்கிவிடாது. வேறு எந்த நாடும் மேலாதிக்கத்துடன் செயல்படுதையும் அந்த நாடு தாங்கிக் கொள்ளாது. இதனால் இந்தியா, அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் உருவாகும். சா்வதேச அளவில் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவும், தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டு பிற நாடுகளின் எல்லைக்குள் பயிற்சி மேற்கொள்வதற்காகவும் ஐ.நா. கடல்சாா் சட்டத்துக்கு அமெரிக்கா இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. கடல் பகுதியில் பயிற்சி செய்யும் சுதந்திரம் என்ற பெயரில் பிற நாடுகளின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதிகளில் பயிற்சி மேற்கொள்வதை அமெரிக்கா வழக்கமாகக் கொண்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வது தொடா்பாக இந்தியாவும் சீனாவும் கூட்டறிக்கை வெளியிடவில்லை. எனவே, இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வது சவாலான விஷயம்தான்.

எனவே, அமெரிக்காவுடனான உறவைத் தொடா்வதில் இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com