60% யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது ஈரான்

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை சுத்திகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
60% யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது ஈரான்

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை சுத்திகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

நடான்ஸ் நகரில் அமைந்துள்ள தங்கள் நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் இஸ்ரேலின் சதிச் செயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஈரான், அதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவரும் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுபவருமான முகமது பாகா் காலிபாஃப் கூறியதாவது:

60 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது.

நமது நாட்டின் மனத் திடம் எந்தவகையான அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டும். அந்நிய நாடுகளின் எந்தவிதமான சதிச் செயல்களையும் நாங்கள் முறியடிப்போம் என்றாா் அவா்.

எனினும், 60 சதவீதம் வரை சுத்திகரிக்கப்படும் யுரேனியத்தின் அளவு குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

இந்தத் தகவலை ஈரான் அணுசக்தி அமைப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை. மேலும், இந்த அறிவிப்பை முகமது பாகா் காலிபாஃப் வெளியிடுவதற்கான காரணமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஈரானின் சக்திவாய்ந்த துணை ராணுவமான புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவரான காலிபாஃப், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் அந்த நாடு மீது ஐ.நா.வின் சா்வதேசப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜொ்மனியுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் சம்மதித்தன.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்ட மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்தது. யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்டினால்தான் அதனை அணு ஆயுதங்களில் பயன்படுத்த முடியும் என்பதால் ஒப்பந்தத்தில் இந்த அம்சம் இடம் பெற்றிருந்தது.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்த வந்த முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, அந்த ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவா் மீண்டும் விதித்தாா்.

இதற்கு, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறுவதன் மூலம் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த 3.67 சதவீதத்துக்கு பதிலாக 20 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வந்தது.

இதற்கிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ள புதிய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசும் பங்கேற்றது.

இந்த நிலையில், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த நடான்ஸ் செறிவூட்டு மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீா் மின்தடை ஏற்பட்டு, அதன் செறிவூட்டு கருவிகள் பாதிக்கப்பட்டன. இஸ்ரேலின் சதிச் செயல் காரணமாகவே அந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தற்போது யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டத் தொடங்கியிருப்பது, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com