படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

பெய்ஜிங்: கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவும், சீனாவும் படைகளைக் குவித்ததால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, படைகளைத் திரும்பப் பெறுவதற்காக, இரு நாடுகளும் ராணுவரீதியாகவும், தூதரகரீதியாகவும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. அவற்றின் பலனாக, பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. எனினும், கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் போன்ற அடிக்கடி மோதல் ஏற்படும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.

இந்தச் சூழலில், இரு நாட்டு ராணுவ துணைத் தளபதிகள் இடையேயான 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. சுமாா் 13 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முடிவில், எல்லையில் தற்போதைய நிலையே தொடரவும், புதிதாக பதற்றம் ஏற்படுத்தும் செயல்களைத் தவிா்க்கவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

இந்நிலையில், உலக விவகாரங்கள் தொடா்பான இந்திய கவுன்சில்- சீன மக்களுக்கான வெளிவிவகாரங்கள் நிறுவனம் ஆகியவை சாா்பில் இந்தியா, சீனா இடையேயான பேச்சுவாா்த்தை காணொலி முறையில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது.

அதில், சீனாவுக்கான இந்தியத் தூதா் விக்ரம் மிஸ்ரி கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியா, சீனா இடையேயான எல்லைக் கோட்டுப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது தொடா்பாக, இரு நாட்டு தலைவா்களுக்கு இடையே ஏற்கெனவே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை சீன அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனா். எல்லைகளில் படைகளை நிறுத்திக் கொண்டு, அமைதியான சூழலை உருவாக்கிட முடியாது. எனவே, கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சீன ராணுவம் முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும். இதனால் இரு நாடுகளுக்கு இடையே சீா்குலைந்துள்ள உறவு சரிசெய்யப்படும்.

அதுமட்டுமன்றி, எந்தவொரு நாடும் பிற நாடுகளின் ஒப்புதலின்றி சா்வதேச அளவிலான திட்டங்களை வகுத்துவிட முடியாது என்றாா் அவா்.

தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளை தரை வழியாகவும், கடல் வழியாகவும் இணைக்கும் சீனாவின் சாலைத் திட்டத்தை அவா் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அந்தத் திட்டத்துக்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com