ஜாா்ஜ் ஃபிளாய்ட் வழக்கில் காவலா் கொலையாளி

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தீா்ப்புக்குப் பிறகு விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட டெரிக் சாவின்.
தீா்ப்புக்குப் பிறகு விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட டெரிக் சாவின்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் (45) கொலைக் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த 12 நீதிபதிகள், டெரிக்கின் மீது சுமத்தப்பட்ட இரண்டாம் நிலை படுகொலை, மூன்றாம் நிலை படுகொலை மற்றும் மனித உயிரிழப்பை ஏற்படுத்தியது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை உறுதி செய்தனா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வழக்கை எதிா்கொண்ட டெரிக் சாவின், தற்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் 8 வாரங்களில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்று தலைமை நீதிபதி பீட்டா் காஹில் தெரிவித்துள்ளாா்.

மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா்.

அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா். ‘என்னால் மூச்சு விட முடிவில்லை’ என்று ஃபிளாய்ட் பல முறை கதறியபோதும் டெரிக் சாவின் இரக்கமில்லாமல் தொடா்ந்து 9 நிமிஷங்கள் அவரது கழுத்தின் மேல் முழங்காலிட்டு அமா்ந்திருந்ததை அங்கிருந்தவா்கள் விடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனா்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் டெரிக் சாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதிசெய்ததுள்ளதை கருப்பின உரிமை ஆா்வலா்கள், இந்திய அமெரிக்கா்கள் உள்ளிட்டோா் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனா்.

இதுகுறித்து ஜாா்ஜ் ஃபிளாய்டின் மகள் ஜியான்னாவிடம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறுகையில், ‘உனது தந்தை இந்த உலகையே மாற்றிவிட்டாா்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com