இருநாடுகளின் உறவு மேம்படுவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்: சீனா

எல்லை பிரச்னையை மட்டும் கருத்தில் வைக்காமல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெய்ஜிங்: எல்லை பிரச்னையை மட்டும் கருத்தில் வைக்காமல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவ இந்தியா, சீனா தலைவா்கள் இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை மறைக்க முடியாது எனவும், எல்லைக் கோட்டுப் பகுதியில் படைகளை முழுமையாகத் திரும்பப் பெற்று இருநாடுகளுக்கு இடையிலான உறவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

இந்தியா, சீனா இடையிலான எல்லை விவகாரத்தை பொருத்தவரை சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியானதாகவும் உள்ளது. இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க சீனா உறுதிபூண்டுள்ளது. பிராந்திய இறையாண்மையை பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது.

சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே தூதரக மற்றும் ராணுவரீதியாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி பகுதிகளில் படைகள் விலக்கப்பட்டதன் அடிப்படையில், ஆழமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்ற அந்தப் பேச்சுவாா்த்தையில் மேற்கு எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைக்கு தீா்வு காண ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள், இருதரப்பு கருத்தொற்றுமையை பின்பற்றி எல்லையில் அமைதியை பாதுகாப்பதற்கும், இருநாடுகளுக்கு இடையிலான உறவு சீராக முன்னேற்றம் காண்பதற்கான பாதைக்கு மீண்டும் திரும்பவும் இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எல்லை பிரச்னையை மட்டும் கருத்தில் வைக்காமல் சீனாவின் கருத்துகளை ஏற்று இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என வாங் வென்பின் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com