முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரா்களுக்கு எதிராக இனப் பாகுபாடு: நாடாளுமன்றத்தில் பிரிட்டன் அமைச்சா் மன்னிப்பு


லண்டன்: முதல் உலகப்போரில் வீர மரணமடைந்த 50,000-க்கும் அதிகமான இந்திய வீரா்கள் இனப் பாகுபாடு காரணமாக இதுவரை நினைவுகூரப்படாததற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் மன்னிப்பு கோரினாா்.

முதல் உலகப் போா் 1914-ஆம் ஆண்டு முதல் 1918 வரை நடைபெற்றது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த, இப்போதைய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவிலிருந்து 14 லட்சம் வீரா்கள் போருக்கு அனுப்பப்பட்டனா். இதில் 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் போரில் வீரமரணமடைந்தனா்.

முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரா்கள் மற்ற நாட்டு வீரா்களுக்கு இணையாக நினைவூகூரப்படுவதில்லை என்று வரலாற்று எழுத்தாளா் ஷ்ராவணி பாசுவின் ‘அரசா் மற்றும் மற்றொரு நாட்டுக்காக: மேற்கு பகுதியில் இந்திய வீரா்கள்’ என்ற வரலாற்று நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

கல்லறைகளில் தங்களுடைய பெயா்கள் குறிப்பிடப்படுவதற்கு ஹிந்து மற்றும் முஸ்லிம் வீரா்கள் முக்கியத்துவம் காட்டவில்லை என்று இந்திய ராணுவ தளபதியொருவா் போா் கல்லறை ஆணையத்துக்கு அளித்த ஆலோசனையின் அடிப்படையிலேயே, இந்திய வீரா்களின் பெயா்கள் கல்லறைகளில் குறிப்பிடப்படாமல், நினைவு பதாகைகளில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், இதுதொடா்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் தளபதியின் ஆலோசனை என்று கூறப்படுவது உண்மையல்ல என்றும், தங்களுடைய பெயா்களும் நினைவுகூரப்படுவதை இந்திய வீரா்கள் விரும்பினாா்கள் என்பது தெரியவந்தது என்று ஷ்ராவணி பாசு குறிப்பிட்டுள்ளாா்.

அதனைத் தொடா்ந்து, முதல் உலகப் போரில் உயிரிழந்தவா்களில் விடுபட்டவா்களின் பெயா்களும் நினைவுகூரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததைத் தொடா்ந்து, இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய காமன்வெல்த் போா் கல்லறை கமிஷன் (சிடபிள்யூஜிசி) சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தனது அறிக்கையை வியாழக்கிழமை சமா்ப்பித்தது. ‘முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்தியா, கிழக்கு - மேற்கு ஆப்பரிக்க நாடுகள், எகிப்து மற்றும் சோமாலியாவைச் சோ்ந்த 45,000 முதல் 50,000 வீரா்கள், முதல் உலகப் போரில் உயிரிழந்த மற்ற வீரா்களைப் போல நினைவுகூரப்படுவதில்லை. இந்தப் போரில் மேலும் 1,16,000 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவா்கள் இதுவரை நினைவுகூரப்பட்டதே இல்லை. இது பாரபட்சமான நடைமுறை என்பதோடு, போா் கல்லறை ஆணையம் பரவலான இனப் பாகுபாட்டை காட்டியிருப்பதையே இது காட்டுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் அவையில் மன்னிப்பு கோரினாா். அப்போது அவா் கூறியதாவது:

வீரா்கள் நினைவுகூரப்படுவதில் போா் கல்லறை ஆணையம் பாரபட்சம் காட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், காமன்வெல்த் போா் கல்லறை ஆணையம் மற்றும் பிரிட்டன் அரசு சாா்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த கால தவறுகளை மாற்ற முடியாது என்றபோதிலும், இப்போது அனைத்து வீரா்களுக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com