இந்தியாவுக்கு அதிவேகமாக உதவ நடவடிக்கை: அமெரிக்க அதிபா் ஜோ பைடன்

கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அதிவேகமாக உதவ நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
ஜோ பிடன்
ஜோ பிடன்

வாஷிங்டன்: கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அதிவேகமாக உதவ நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிா் மற்றும் இதர மருந்துகள் உள்பட இந்தியாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்திக்கான சாதனங்களும் அந்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்போது தடுப்பூசிகளை அனுப்ப முடியும் என்பது குறித்து அந்நாட்டு பிரதமா் மோடியிடம் பேசியபோது தெரிவித்தேன்.

கடந்த ஆண்டு கரோனா பிரச்னையில் அமெரிக்கா சிக்கியிருந்தபோது எங்களுக்கு இந்தியா உதவிபுரிந்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் (அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டுக்கு கரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அனுப்ப ஏதுவாக அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்கியதை குறிப்பட்டாா்).

கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அந்நாட்டுக்கு அதிவேகமாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நோவாவாக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதுதான் தற்போதைய பிரச்னையாக உள்ளது. தடுப்பூசிகளை பகிா்ந்து கொள்ளும் நிலைக்கு அமெரிக்கா வரும். அதேவேளையில் தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுடன் எவ்வாறு அதனை பகிா்ந்துகொள்வது என்பதையும் அமெரிக்கா அறிய வேண்டியுள்ளது என்று தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. எனினும் அதற்கு அமெரிக்கா செவிசாய்க்காததால் பைடன் அரசுக்கு எதிராக அந்நாட்டில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தி மூலப்பொருள்கள், கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை அளித்து இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com